இலங்கையில் நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறையை நீக்கி, நாடாளுமன்ற ஆட்சி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஏகோபித்து, உரிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கட்சிகள் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளன.
அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிடில், முழு நாடும் சீர்குலைந்து அராஜகம் தலைவிரித்து ஆடக்கூடிய மாபெரும் ஆபத்து உருவாகும் எனவும் அக் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன கூட்டாக ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள போராட்ட சூழ்நிலையை அரச தலைவரும், அரசாங்கமும், சகல அரசியல் கட்சிகளும் பொறுப்புணர்வோடு உரிய முறையில் கையாள வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.
நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறையே, இந்த நெருக்கடி நிலைக்கு அடிப்படை காரணம் என்பதில் பரந்துபட்டதும் தீவிரமானதுமான கருத்தோட்டம் எழுந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார அரச தலைவர் ஆட்சி முறையை நீக்கி, அதற்கு பதிலாக நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு நாடு திரும்பிச்செல்வதே தீர்வாகும் எனவும் தமிழ் தேசியக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்த தீர்மானத்தை இலங்கையின் தேசிய மட்டத்தில் உடனடியாக மேற்கொள்வதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் ஏகோபித்து உரிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கட்சிகள் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளன.