இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நடுக்கடலில் தவறி விழுந்து மாயமாகியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இராமநாதபுரம் மாவட்டம் – இராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டை கடற்கரையில் இருந்து நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (9) மாலை 12 மீனவர்கள் நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
மீனவர்கள் தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் இருந்த மீனவர் முனியராஜ் கடலில் தவறி விழுந்து காணாமல் போனார்.
நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை சக மீனவர்கள் தேடி வந்த நிலையில், கடலில் விழுந்து காணாமல் போன மீனவர் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை மீன்வளத்துறை அதிகாரிகள், மெரைன் காவல்துறை மற்றும் இந்திய கடலோர காவல் படை அதிகாரி ஆகியோரிடம் கடலில் மாயமான மீனவரை மீட்டுத் தரக் கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை முதல் தொடர் மழைக்கு மத்தியில் மீன் வளத்துறை, இராமேஸ்வரம் மெரைன் காவல்துறை, மற்றும் மண்டபம் கடலோர காவல் படைக்குச் சொந்தமான ரோந்துப் படகுகளின் உதவியுடன், கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை தேடி வருகின்றனர்.
நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஹெலிகொப்டரை பயன்படுத்தி விரைவில் மீனவரை மீட்க வேண்டும் என மாயமான மீனவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.