பொதுவாக வீடு கட்டும்போது வாஸ்து பார்ப்பது மிக முக்கியமான ஒன்று. இயற்கையின் ஐந்து கூறுகளான காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் வானம் ஆகியவை சமநிலை பெற்றிருக்கும் இடத்தில் சகல சம்பத்துக்களும் தேடி வரும்.
எனவே நீங்கள் ஒரு வீட்டைக் கட்டும்போது இந்த பஞ்சபூதத்தை கணக்கில் கொள்வது தான் வாஸ்து.
தற்போது கட்டப்படும் பெரும்பாலான பெரிய கட்டிடங்கள் பஞ்சபூதங்களை கருத்தில் கொண்டு கட்டப்படுகின்றன.
வாஸ்து சாஸ்திரப் படி எந்த அறைகள் எந்த திசையில் அமைந்திருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
பூஜை அறை
மிக முக்கியமாக இருக்க வேண்டியது இறைவனை வழிபடக் கூடிய பூஜை அறை. இது வீட்டில் வட கிழக்கு பகுதியில் இருப்பது மிகவும் புனிதமானது.
சுவாமி படங்கள் கிழக்கு திசை நோக்கி பார்க்கும் படி வைக்க வேண்டும். இந்த திசையில் சேமித்து வைக்கக் கூடிய அறை இருக்கலாம்.
இந்த பகுதியில் சமையல் அறை, கழிப்பறை, உள்ளிட்டவை இருப்பது ஆகாது.
துளசி
முன்னோர்கள் பெரும்பாலான வீட்டில் துளசி மாடம் வைத்திருந்தனர். புனிதமான மற்றும் மருத்துவ குணம் நிறைந்தது துளசி.
வீட்டில் துளசி மாடம் இருந்தால் நேர்மறை ஆற்றல்கள் ஈர்க்க வல்லது.
துளசி சுற்றுச் சூழலை காத்து, காற்றை தூய்மைப் படுத்தும் ஆற்றல் கொண்டது. இது வீட்டில் முன் இருப்பது நல்லது.
குறிப்பாக கிழக்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது.
விளக்கு திசை
பொதுவாக வீட்டில் விளக்கு ஏற்றுவது வெறும் பூஜைக்காகவோ, வெளிச்சத்திற்காக மட்டும் கிடையாது. விளக்கு என்பது வீட்டின் எதிர்மறை ஆற்றலை நீக்கி மங்களத்தைக் கொண்டு வரக்கூடியது.
மேலும், வீட்டில் எப்போதும் ஒரு விளக்கு ஏற்றாமல், இரண்டு ஏற்றுவது மிகவும் சிறந்தது. வீட்டின் துளசி மாடத்தில் ஒரு விளக்கேற்றுவது அவசியம்.
விளக்குகள் கிழக்கு நோக்கி ஏற்றுவது நல்லது. தெற்கு நோக்கி ஏற்றுதல் ஆகாது.
படுக்கையறை
முக்கிய அறைகளில் ஒன்று படுக்கை அறை. ஓய்வு என்பது ஒருவரின் உடல் மற்றும் மன சமநிலைக்கு முக்கியமானது.
தூக்கம், ஓய்வு எடுக்கக் கூடிய படுக்கை அறை வீட்டின் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது மிகவும் உகந்தது.
நாம் படுத்து தூங்கும் போது தெற்கில் தலை வைத்து படுக்கலாம். கிழக்கில் தலை வைத்து படுப்பது மிகவும் நன்மையைத் தரக்கூடியது.
கிழக்கு நோக்கி தலையுடன் வைத்து தூங்கும் மாணவர்களுக்கு நேர்மறை ஆற்றல், ஞாபக சக்தி அதிகரிக்கும். வடக்கில் தலை வைத்து படுத்தால் நோய், கனவுகள் மற்றும் தூக்கமின்மை ஆகியவை மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.
சமையலறை
வீட்டின் தென் கிழக்கு பகுதியில் சமையல் அறை அமைவதும், கிழக்கு நோக்கி நின்று சமைப்பது மிகவும் நல்ல அமைப்பாகும்.
பூஜை அறைக்கு அருகில் இருக்கலாம். ஆனால் கழிப்பறைக்கு அருகில் சமையல் அறை அல்லது பூஜை அறை இருப்பது நல்லதல்ல.
குளியலறை
குளிக்கும் போது உடல், மன அழுத்தம் குறையும். இந்த குளியலறை நம்முடைய எதிர்மறை சக்திகளை நீக்கக் கூடியது.
இது சூரிய வெளிச்சம் படும் வகையில் அமைய வேண்டும் என்பதால் கிழக்கு பகுதியில் குளியலறை அமைப்பது மிகவும் நல்லது.