யாழ். காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியின் அதிபர் நேற்று தற்கொலை செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
58 வயதான பொ.அமிர்தலிங்கம் அவரது தாயார் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மானிப்பாயில் வசிக்கும் அவர் அளவெட்டியில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீடுகளை உள் பக்கமாக பூட்டிய பின்பு மின்சார வயரின் உதவியுடன் வீட்டிற்குள்ளேயே தூக்கில் தொங்கியுள்ளார்.
காலையில் வீட்டில் இருந்து சென்ற குறித்த அதிபரைக் காணாது வீட்டார் பல இடத்திலும் தேடியுள்ளனர். இவ்வாறு தேடுதல் மேற்கொண்ட போது அளவெட்டியில் உள்ள வீட்டிற்கு தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டவேளையில் தொலைபேசி இயங்கும் சத்தம் வீட்டிற்குள் இருந்து வருவது கவனிக்கப்பட்டது.
இதனையடுத்தே வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து மல்லாகம் பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டதோடு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறும் உத்தரவிட்டார்.