இலங்கையில் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாகுவது நிச்சயம், இதனால் மஹிந்தவுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்படும், அவருக்கு பாதுகாப்பை பெற்றுத்தருமாறு பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதை கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவது நிச்சயமே, இதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் படி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கும் என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக அப்போது செயற்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா இரகசிய அறிக்கை ஒன்றை கடந்த 2013ஆம் ஆண்டிலேயே வெளியிட்டிருந்தார் என்பதை சுட்டிக்காட்டினார்.
மீண்டும் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த குற்றச்சாட்டிற்காக கிளிநொச்சியில் கடந்த மாதம் 13ஆம் திகதி முன்னாள் போராளிகள் மூவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கிளைமோர் குண்டு, மேலும் பல வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் தான் வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுமாறு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தி வருகின்றார். ஆனால் எக்காரணத்திற்காகவும் அங்கிருந்து படையினரை அகற்றக்கூடாது.
மேலும். த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கே மரண அச்சுறுத்தல் காணப்படுமாயின் விடுதலைப் புலிகளை தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எவ்வளது உயிர் அச்சுறுத்தல் காணப்படும்?
விடுதலைப் புலிகள் மஹிந்த ராஜபக்சவை கொலை செய்யட்டும் என்ற காரணத்திற்காகவே அவருக்கு வழங்கிய பாதுகாப்பையும் அரசாங்கம் குறைத்துள்ளது.
எனவே முன்னர் இருந்த அதிகளவான பாதுகாப்பை மஹிந்த ராஜபக்சவுக்கு மீள வழங்கும்படி பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.