மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் தற்போது தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
அப்போது, செய்தியாளர்கள் மருத்துவர்கள் குழுவினர் சரமாரியாக பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது தமிழகமே எதிர்பார்த்திருந்த போது சிகிச்சை குறித்தும் மரணம் குறித்தும் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்று செய்தியாளர்கள் ஐயம் தெரிவித்தனர்.
அதற்கு, “ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. உலகின் உயர்தர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. சிகிச்சையில் யாரும் குறுக்கிடக்கிடவில்லை. நாங்கள் சுதந்திரமாகவே செயல்பட்டோம். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தகவலும் மறைக்கப்படவில்லை.
மாரடைப்பு ஏற்படும் வரை ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தார். மாரடைப்பு வராமல் இருந்திருந்தால் ஒரு வாரத்தில் வீடு திரும்பி இருக்கலாம். முறையான சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது” என்று மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்தனர்.