திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் அளிப்பதால் இங்குள்ள இறைவனை வேண்டினால் நீண்ட ஆயுளை பெறலாம் என்பது ஐதீகம்.
16 வயதை மட்டுமே ஆயுளாக கொண்ட மார்க்கண்டேயன் தனது உயிரை தற்காத்துக்கொள்ள சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டார். இறுதியில் திருக்கடையூர் ஆலயத்துக்கு வந்து சிவபெருமானை இறுக பற்றிக்கொண்டு தன்னை எமதர்மனிடம் இருந்து காப்பாற்றுமாறு வேண்டினார். அப்போது அங்கு வந்த எமதர்மன் பாசக்கயிற்றை மார்க்கண்டேயன் மீது வீச பாசக்கயிறு மார்க்கண்டேயனோடு சேர்ந்து சிவபெருமான் மீதும் விழுந்தது.
சிவபெருமான் மீது விழுந்த பாசக்கயிற்றை எமதர்மன் பற்றி இழுத்ததால் சினம் கொண்ட சிவபெருமான் எமதர்மனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயனுக்கு நீண்ட ஆயுளை வழங்கினார். எமதர்மனின் பாசக்கயிறு பட்டதால் இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உச்சியிலும் மேனியிலும் கயிற்றின் தடம் காணப்படுகிறது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் அளிப்பதால் இங்குள்ள இறைவனை வேண்டினால் நீண்ட ஆயுளை பெறலாம் என்பது ஐதீகம். மேலும் மனித உயிர்களை எடுக்க வரும் காலனை இங்குள்ள சிவபெருமான் சம்ஹாரம் செய்ததால் நீண்ட ஆயுளுக்கு அதிபதியாக அமிர்தகடேஸ்வரர் திகழ்கிறார்.
எனவே 60 வயதை நிறைவு செய்தவர்கள் நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் வேண்டி இக்கோவிலில் மணி விழா வழிபாடும், 70 முதல் 75 வயது வரை உள்ளவர்கள் பீமரத சாந்தி வழிபாடும், 75 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்கள் விஜரத சாந்தி வழிபாடும், 80 வயது முதல் 85 வயது வரை உள்ளவர்கள் சதாபிஷேக வழிபாடும் நடத்துகிறார்கள்.