மலையக தோட்டப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது கிராமத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 9ம் திகதி திறந்து வைக்கவுள்ளார்.
நுவரெலியா அக்கரபத்தனை உட்வுஹில் தோட்டத்தில் 150 தனித்தனி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அவற்றில் முதற்கட்டமாக 72 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மலையக புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் எண்ணக்கருவிற்கு அமைய, லயன் வீடுகளுக்கு மாற்றாக இந்த புதிய பெருந்தோட்ட கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.
மூன்றே பேர்ச்சர்ஸ் காணியில் இரண்டு அறைகள், சமையலறை, வரவேற்பறையுடன் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வீட்டிற்கான மின்னிணைப்பு மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
வீட்டு உரிமையாளர்கள் அனைவருக்கும் 5பேர்ச்சர்ஸ் காணிக்கான உறுதிப் பத்திரத்தை ஜனாதிபதி பயனாளிகளுக்கு வழங்கவுள்ளார்.
மலையகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் ஆங்கிலேயர் நிர்மாணித்த லயன் குடியிருப்புக்களிலேயே இதுவரை வாழ்ந்து வந்தனர்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததை அடுத்து 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 411 வீடுகளை நிர்மாணித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது.
2016ஆம் ஆண்டு மட்டும் 1430 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. 2020ஆம் ஆண்டளவில் மலையகத்தில் ஐம்பதாயிரம் வீடுகளை நிர்மாணித்து மக்களுக்கு வழங்கி மலையக கிராமங்களை உருவாக்கி மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
ஒவ்வொரு வீடும் ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் முதல் பன்னிரெண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.