சிறுத்தை’ படத்தில் முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக வந்த கார்த்தி, இப்போது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதை ‘சதுரங்க வேட்டை’ டைரக்டர் வினோத் இயக்குகிறார்.
மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து முடித்த பிறகு இந்த படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு 3 நாட்கள் சென்னையில் நடந்தது. வருகிற 14-ந் தேதி முதல் 2-ம் கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் தொடங்குகிறது. மார்ச் 29-ந் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
போலீஸ் சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் இங்கு தான் படமாகிறது. இது மட்டுமல்ல இரண்டு பாடல்காட்சிகளும் ராஜஸ்தான் மாநிலத்தின் எழில் கொஞ்சும் பகுதிகளில் படமாக்கப்படுகின்றன.
இப்படத்தின் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். அபிமன்யூ சிங் வில்லனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே, தலைவா, பத்து எண்றதுக்குள்ள ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர். மேலும், தெலுங்கு காமெடியன் நர ஸ்ரீனிவாஸ் இப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். இவரும் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.