சென்னை ஐகோர்ட்டில், பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘நடிகர் சூர்யா, அனுஷ்கா, சுருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சிங்கம் 3’ என்ற ‘எஸ்.ஐ.3’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளேன். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படம் வெளியிடப்படும் அதே நாளில், காலை 11 மணிக்கு திருட்டுத்தனமாக இந்த திரைப்படத்தை நாங்களும் வெளியிடுவோம் என்று சில இணையதளங்கள் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, ‘கபாலி’ திரைப்படத்தை வெளியிட தடை விதித்து இணையதளங்களுக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதேபோன்ற தடை உத்தரவை, 186 இணையதள சேவை நிறுவனங்களுக்கு பிறப்பிக்கவேண்டும். சிங்கம் 3 திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, இந்த வழக்கை சிவில் நீதிமன்றத்தில் தான் தொடர வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை திரும்ப பெறுவதாக மனு தாரர் தரப்பு வக்கீல் கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.