கூந்தல் வறண்டு இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து, வாரத்தில் இரண்டு முறை கூந்தலில் தேய்த்து குளித்துவரலாம்.
காலங்கள் மாறினாலும் பெண்கள் தங்களது கூந்தல் மீது கொண்டிருக்கும் ஈர்ப்பு என்றுமே மாறாது. ஆரம்ப காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கைப் பொருட்களின் காரணமாக, வயதான பின்னரும் கூந்தலின் கருமை நிறம் மாறாமல், முடி உதிர்வு பிரச்சினை இல்லாமல் கூந்தல் அடர்த்தியாக இருந்தது.
இன்று கூந்தல் பராமரிப்புக்கு எண்ணற்ற பொருட்கள் வந்தபோதிலும், இளம் பருவத்திலேயே இளநரை ஏற்படுகிறது. இதற்கு காரணம் கூந்தல் பராமரிப்பு பொருட்களில் உள்ள வேதிப்பொருட்கள். மேலும் உண்ணும் உணவு, ஹார்மோன் சுரப்பில் உள்ள ஏற்றத்தாழ்வு காரணமாகவும் இளநரை ஏற்படுகிறது.
இவ்வாறு இளநரை, கூந்தல் உதிர்தல், கூந்தல் வறட்சி, கூந்தல் நுனியில் வெடித்தல், பொடுகுத் தொல்லை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல், கூந்தல் பட்டுப்போல் மின்னுவதற்கான இயற்கை குறிப்புகளை பார்க்கலாம்.
வெந்தயத்தை நன்றாக ஊறவைத்து, பசைபோல அரைத்து கூந்தலில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் குளுமை அடைவதோடு, கூந்தலும் பளபளப்பாகும்.
மாதம் ஒரு முறை வேப்பிலை மற்றும் துளசி இலை சேர்த்து அரைத்து தலையில் தடவலாம். அரை மணிநேரம் கழித்து தலைக்கு குளிப்பதன் மூலம் பொடுகுத் தொல்லை மற்றும் பேன் தொல்லையில் இருந்து விடுபடுவதோடு கூந்தலும் பளபளப்பாகும்.
கற்றாழையின் சதைப்பகுதியுடன் சிறிதளவு தயிர் கலந்து, கூந்தலின் வேர்க்கால்களில் நன்றாக படும் படி அழுத்தித் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இதன் மூலம் பொடுகுத் தொல்லை நீங்குவதோடு முடியின் நுனியில் ஏற்படும் வெடிப்பு பிரச்சினையும் நீங்கி கூந்தல் பளபளப்பாகும்.
கூந்தல் வறண்டு இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து, வாரத்தில் இரண்டு முறை கூந்தலில் தேய்த்து குளித்துவரலாம். இதன் மூலம் வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்கும்.
தலா 50 மில்லி அளவு கறிவேப்பிலை சாறு மற்றும் மருதாணி சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து, 150 மில்லி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். இந்த எண்ணெய்யை இளம் சூட்டில் தலைமுடியில் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும். முடி உதிர்தல் குறையும். கூந்தல் பளபளப்பாகும்.
அரை மூடி தேங்காயில் இருந்து தேங்காய் பால் எடுக்கவும். அதன் முதல் பாலை கூந்தலில் நன்றாக தேய்க்கவும். ஒரு மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கூந்தலை கழுவுவதன் மூலம், பளபளப்பான கூந்தலைப் பெறலாம்.
நெல்லிக்காய் எண்ணெய்யை தினமும் தலையில் தேய்ப்பதன் மூலம், முடி உதிர்வது குறைந்து கூந்தல் வலுவாகும்.
சின்ன வெங்காயச் சாறினை முடியின் வேர்க்கால்களில் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்தல், புழுவெட்டு மற்றும் தலையில் உள்ள நுண் கிருமிகள் அனைத்தும் நீங்கும்.