எங்களது கடைசி நேர பந்து வீச்சு (டெத் பவுலிங்) சிறப்பாக இருந்தது. ராகுல் திரிபாதி மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்தார் என ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
ஐ.பி.எல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா வை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. இதனால் ஐதராபாத்துக்கு 176 ரன் இலக்காக இருந்தது.
நிதிஷ் ரானா 36 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), ஆந்த்ரே ரஸ்சல் 25 பந்தில் 49 ரன்னும் ( 4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். தமிழக வீரர் டி.நடராஜன் 37 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இம்ரான் மாலிக் 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், ஜான்சென், சுஜித் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராகுல் திரிபாதி 37 பந்தில் 71 ரன்னும் (4பவுண்டரி, 6சிக்சர்), மார்க் கிராம் 36 பந்தில் 68 ரன்னும் (6 பவுண்டரி , 4 சிக்சர்) எடுத்தனர். ரஸ்சல் 2 விக்கெட் கைப்பற்றினார்.
ஐதராபாத் அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் (ராஜஸ்தான், லக்னோ) தோற்று இருந்தது. அதன்பிறகு சென்னை, குஜராத்தை தொடர்ந்து வீழ்த்தி இருந்தது.
இந்த வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது:-
எங்கள் ஆட்டத்தில் முன்னேற்றத்தை காண முடிகிறது. தொடக்கத்திலேயே விக்கெட் கைப்பற்றியது முக்கியமானது. மேலும் மெதுவான பனித்துளியும் உதவியாக இருந்தது.
எங்களது கடைசி நேர பந்து வீச்சு (டெத் பவுலிங்) சிறப்பாக இருந்தது. ராகுல் திரிபாதி மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்தார். இதேபோல மர்கிராமும் மாறுபட்ட பங்களிப்பை வெளிப்படுத்தினார்.
மார்கோ ஜான்செனின் பவுன்ஸ் மற்றும் வேகம் நன்றாக இருந்தது. பந்தை சுவிங் செய்யும் புவனேஸ்வர் குமாருடன் அவர் தாக்குதலில் பெரும் பங்கு வகித்தார்.
உம்ரான் மாலிக் ஒவ்வொரு பந்தையும் 150 கிலோ மீட்டர் வேகத்தை தொடும் அளவுக்கு வீசுகிறார். இதனால் பந்தை தொட்டவுடன் பவுண்டரிக்கு சென்று விடுகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நாங்கள் மிகுந்த முன்னேற்றம் அடைந்து வருவதை காண முடிந்தது.
இவ்வாறு வில்லியம்சன் கூறினார்.
ஐதராபாத் அணி 6-வது ஆட்டத்தில் பஞ்சாப்புடன் நாளை மோதுகிறது.
கொல்கத்தா அணி 3-வது தோல்வியை தழுவியது. 6 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி 7-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 18-ந் தேதி எதிர் கொள்கிறது.