சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஓ.எஸ். அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.
சாம்சங் நிறுவனம் தனது பழைய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு 12 சார்ந்த அப்டேட் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் கேலக்ஸி M62 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யு.ஐ. 4.1 அப்டேட் வழங்கப்பட்டது. தற்போது சாம்சங் கேலக்ஸி A32 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சாம்-மொபைல்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, கேலக்ஸி A32 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யு.ஐ. 4.1 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், முதற்கட்டமாக இந்த அப்டேட் தாய்லாந்தில் மட்டும் வெளியிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் மற்ற சந்தைகளிலும் இந்த அப்டேட் வெளியிடப்படும் என தெரிகிறது.
சாம்சங் கேலக்ஸி A32 4ஜி மாடலுக்கு இந்த அப்டேட் வழங்கப்படுவது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. தாய்லாந்தில் தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் அப்டேட் A326BXXU4BVC8 எனும் firmware வெர்ஷனை கொண்டிருக்கிறது. ஓ.எஸ். அப்டேட் உடன் இந்த ஸ்மார்ட்போனிற்கு மார்ச் மாதத்திற்கான செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது வழங்கப்பட்டு இருக்கும் செக்யூரிட்டி பேட்ச் சாம்சங் மற்றும் கூகுள் மென்பொருள்களில் கண்டறியப்பட்டு இருக்கும் சுமார் 50-க்கும் அதிக மென்பொருள் பிழைகளை சரி செய்துள்ளது. மேலும் சாதனத்தின் பெர்பார்மன்ஸ் அப்டேட், டிவைஸ் ஸ்டேபிலிட்டி உள்ளிட்டவை புது அப்டேட் மூலம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.