காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக கடவத்தை பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடவத்தையில் உள்ள இந்த இராணுவ கமாண்டோ படைப் பிரிவின் முகாமில், தற்போது காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எழுப்பி வரும் கோஷத்தை கூறியவாறு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நபர்களுக்கு பயிற்சிகளை வழங்கி முடித்த பின்னர், காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தி வருவோர் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எதற்காக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இராணுவ முகாமில் சிலர் போராட்டம் நடத்துகின்றனர். அங்கு இராணுவத்தினர் அதில் தலையிட தயாராக இருக்கின்றனர்.
தாக்குதல் நடத்த கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இது கடவத்தை கமாண்டோ படைப் பிரிவின் முகாமில் நடத்தப்படும் பயிற்சி என்பதை பொறுப்புடன் கூறுகிறோம். இந்த முகாமில் நடத்தப்படும் பயிற்சி என்ன என்பதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.
எதற்கு தயாராகின்றனர், எங்கு இந்த பயிற்சி நடக்கின்றது என்பதற்கான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும். அதேவேளை கோட்டாபய வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்திய நபர், காலிமுகத் திடல் போராட்ட களத்திற்கு சென்றிருந்தார். வடை விற்பனை செய்யும் கடை ஒன்றில் அந்த நபர் காணப்பட்டார்.
அரசாங்கம் தமக்கு தேவையான நேரத்தில் பயன்படுத்த போராட்ட களத்திற்குள் சிலரை அனுப்பியுள்ளது. இது குறித்து கவனமாக இருக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரிடம் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் அமைச்சரவையை மீண்டும் நியமிப்பது தொடர்பாக அரசாங்கத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
ஓரிரு நாட்களின் அமைச்சரவை பதவியேற்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஜனாதிபதிஅரச தலைவர், பிரதமர் ஆகியோரை தவிர ஏனைய ராஜபக்சவினர் இல்லாத அமைச்சரவையை நியமிக்க தயாராகி வருகின்றனர். போராட்டத்தின் தன்மையை பார்க்குமாறு நாமல் ராஜபக்ச உட்பட ராஜபக்சவினரை கேட்டுக்கொள்கிறோம்.
வீதியில் மக்கள் உங்களை தூஷண வார்த்தைகளால் திட்டுகின்றனர். அரசாங்கம் ஒன்றை முன்னெடுத்துச் செல்ல வாக்குகளை பெற்றால் மாத்திரம் போதாது. வாக்குகளை பெற்று ஆயுதங்களை காட்டி அதிகாரத்தை தக்கவைக்கவும் பார்த்தனர்.
எனினும் சமூகத்தில் சிறிதளவேனும் அங்கீகாரம் இருக்க வேண்டும். மக்கள் மத்தியில் ராஜபக்சவினர் மோசமான அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அப்படியால், ராஜபக்சவினர் யாருக்கு தலைமையேற்க போகின்றனர். எப்படி ராஜபக்சவினர் அரச தலைவராகவும் பிரதமராகவும் பதவி வகிக்க முடியும்.
எரிபொருள், மின்சாரம் போன்றவற்றை வழங்கியதும் காலிமுகத் திடல் போராட்டம் கலைந்து விடும் என அரசாங்கம் எண்ணுகிறது. அதன் பின்னர் அமைச்சரவையை நியமிக்கலாம், அதுவரை பதவியில் இருந்து விலகி இருக்கலாம் என ராஜபக்சவினர் கருதுகின்றனர்.
பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய ராஜபக்சவினர் தற்போதைக்கு அமைச்சு பதவியை ஏற்பதில்லை என்றே தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கம் இந்த முடிவை எடுத்து அறிவித்தால், போராட்டம் மேலும் பல மடங்காக அதிகரிகும் என நாங்கள் அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம் எனவும் துமிந்த நாகமுவ கூறியுள்ளார்.