உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் கொடுத்து உதவினால் கணிக்க முடியாத விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்காவையும், அதன் கூட்டணி நாடுகளையும் ரஷ்யா அதிகாரபூர்வமாக எச்சரித்துள்ளது.
அமெரிக்கத் தலைநகர் வோஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய இரண்டு பக்க குறிப்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரைனுக்கு அனுப்பும் ஆயுதங்கள் உக்ரைனில் நடக்கும் போருக்கு எண்ணெய் வார்ப்பதாக உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கான அமெரிக்காவின் புதிய ஆயுத உதவித் தொகுப்பு குறித்த தகவல் கசியத் தொடங்கிய நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இந்தக் குறிப்பு அனுப்பப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த எச்சரிக்கை குறிப்பு வெளிவந்த சில மணி நேரம் கழித்து 80 கோடி டொலர்கள் மதிப்புள்ள இராணுவ உதவியை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார்.
ஹவிட்சர்கள் போன்ற நீண்ட தூர எறிகணைகள் இதில் அடக்கம். இத்தகைய ஆயுதங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு அனுப்புவது இதுவே முதல் முறை.
ரஷ்ய இராணுவ பலத்துக்கு ஈடுகொடுக்கும் வகையிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் நோக்கில் இத்தகைய ஆயுதங்கள் அனுப்பப்படுகின்றன. அமெரிக்காவும், நேட்டோவும் உக்ரைனுக்கு அளிக்கும் இராணுவ உதவிக்கு பலன் இருப்பதை ரஷ்யாவே ஒப்புக்கொள்ளும் வகையில் இந்த எச்சரிக்கை அமைந்திருப்பதாகவும் பார்க்க முடியும் என மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த புதிய ஆயுத உதவியின் முதல் பகுதி, அடுத்த சில நாட்களில் உக்ரைனை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் உள்ள தகராறுக்குரிய டான்பாஸ் பகுதியில் அடுத்த சில வாரங்களில் பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கிழக்கு உக்ரைனில் படைபலத்தை திரட்டிவருகிறது ரஷ்யா. இந்த நிலையில்தான் அமெரிக்க ஆயுத உதவி உக்ரைன் சென்று சேரவுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கியது முதல், இதுவரை 300 கோடி டொலர் மதிப்புள்ள இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா.