ஆஞ்சநேயர் மூலம் நட்சத்திரத்தில் தோன்றியவர் ஒருசமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க வந்தார். ஆஞ்நேயர் பொதுவாக தினமும் தோட்டத்தில் மலர்ந்த பூக்களைப் பறித்து ராமரை வழிபட்டு பாடல்களைத் தன்னை மறந்து பாடிக் கொண்டிருப்பார்.
அன்று தன்னைப் பிடிக்க சனீஸ்வரர் வாசலில் காத்துக் கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டார் ஆஞ்நேயர். சனி பகவான் அவர் கடமையைச் செய்ய வந்துள்ளார்.
செய்யட்டும். நான் எனது கடடையைச் செய்கிறேன் என்று நினைத்தபடியே இருந்தார். மாளிகையை விட்டு வெளியில் செல்லும் போது தனது வாலின் நுனியை மட்டும் நீட்டினார்.
வெளியில் காத்துக் கொண்டிருந்த சனி பகவான் ஆஞ்சநேயரின் வாலைக் கண்டதும் அவரது வாலில் ஏறி அமர்ந்து இறுக்கிப் பிடித்து கொண்டார். சனி பகவானை விரட்டுவது எப்படி என சிறிது நேரம் யோசித்தார் ஆஞ்சநேயர். ராமபிரானைத் துதிக்கும் போது துள்ளிக் குதித்துக் கொண்டே வழிபட வேண்டும் என முடிவு எடுத்தார்.
அதன் படியே ஆஞ்சநேயர் குதிக்கத் தொடங்கினார்.
இதனால் வாலின் நுனியில் இருந்த சனி பகவானுக்கு உடல் வலி எடுத்தது. ஆஞ்சநேயர் குதிப்பதை நிறுத்திவிட மாட்டாரா…. என யோசித்த சனி பகவான் உடல் வலி அதிகமாகவே ஆஞ்சநேயரிடம் எப்போது குதிப்பதை நிறுத்து வாய்? என்று கேட்டார். இதைக்கேட்டதும் ‘சனி பகவானே… ஏழரை வருஷத் திற்கு துள்ளிக் குதித்துக் கொண்டே தான் இருப்பேன்’ என்றார் சனி பகவான் பயந்து போனார்.
இனிமேலும் ஆஞ்நேயரைப் பிடித்துக் கொண்டிருப்பதால் நமக்கு எந்தப்பயனும் இல்லை என யோசித்த சனி பகவான் ஆஞ்சநேயரை விட்டு விலகி விட முடிவு செய்தார் அதன்படி ஆஞ்சநேயரிடம் சொல்லிவிட்டு வெளியேறினார் சனி பகவான். ஆஞ்சநேயரும் மிகவும் மகிழ்ந்து சனி பகவானிடம் வேண்டுகொள் விடுத்தார்.
‘சனீஸ்வரர்… என்னை விட்டு விலகியது போல் ஏழரை ஆண்டு சனி பிடிக்கும் போது உன்னிடமிருந்து விலக வேண்டும் என நினைத்து என்னை வழிபடும் என் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவையும், சங்கடத்தையும் நீ கொடுக்கக்கூடாது’ எனக் கேட்டுக் கொண்டார். சனி பகவான் சம்மதித்தார் எனவே ஏழரை சனி, அஷ்டம சனியின் போது நமது துயரங்கள் விலக ஆஞ்சநேயரை வழிபட்டால் பக்தர்கள் சனி பகவானிடமிருந்து விடை பெறுவதற்கு ஆஞ்சநேயர் துணைபுரிவார்.