நாட்டில் பேருந்து கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை 35 சதவீதத்தினால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பேருந்து கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 20 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாவாக அதிகரிப்படுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி என்பன எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளன. இந்த நிலையில், பேருந்து கட்டணங்கள் 40 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டுமென குறித்த சங்கம் கோரிக்கை முன்வைத்திருந்தது.
இதனையடுத்து போக்குவரத்து அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேருந்து கட்டண அதிரிப்புக்கு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து பேருந்து கட்டணங்களும் 35 சதவீதத்தினால் அதிகரிக்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.