இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட அன்றாடம் கிடைக்கக்கூடிய விலை மலிவான அதேசயம் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்கறிகளில் ஒன்று கேரட்.
நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், சருமத்திற்கு அழகையும் ஒருங்கே கொடுக்கக்கூடியது கேரட், இதில் நம் உடலுக்கு தேவையான விட்டமின்கள், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கேரட்டை முழுமையாக சாப்பிடுவது நம்முடைய உடலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
உங்களது கண்பார்வையை மேம்படுத்துவதில் தொடங்கி புற்றுநோய் செல்களை அழித்தல், இதய நோய்களை தடுத்தல் மற்றும் நோய் எதிர்ப்பு திறனையையும் அதிகப்படுத்துகிறது.
கண்களுக்கு சிறந்தது
கேரட் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என பலரும் சொல்லக்கேட்டிருப்போம், இதற்கு காரணம் இதிலுள்ள பீட்டா கரோட்டின் தான்.
விட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
இதுதவிர Lutein மற்றும் Zeaxanthin போன்ற கரோட்டினாய்டுகள் கண் பார்வை திறனை மேம்படுத்துவதுடன் கண்புரை மற்றும் பார்வை இழப்பு போன்ற கண் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்.
வாரத்திற்கு மூன்று முறை கேரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம்.
உடல் எடையை குறைக்க
கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் நிறைந்துள்ள கேரட்டை தாராளமாக அனைவரும் சாப்பிடலாம், குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் கேரட்டை எடுத்துக் கொள்ளலாம்.
மற்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளுடன் ஒப்பிடுகையில் கேரட் சாப்பிடும் போது வெகு சீக்கிரமாகவே வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும், இரவுநேரம் பசியால் அவதிப்படுபவர்களுக்கு கேரட் சிறந்த தேர்வாக இருக்கிறது.
குடல் ஆரோக்கியத்திற்கு
கேரட்டில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானம் எளிதாக நடைபெற உதவுவதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
குறிப்பாக இதில் கரையும் மற்றும் கரையாக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் நன்மை தரும் பக்டீரியக்களின் செயல்பாடுகளை தூண்டுகிறது.
மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் தொடர்ந்து கேரட்டை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.
நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்த
கேரட்டில் அதிகம் நிறைந்துள்ள விட்டமின் ஏ நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது, இவை ரத்த வெள்ளை அணுக்கள் அதாவது T-செல்களுக்கு உதவிபுரிகிறது.
கிருமித்தாக்கத்தில் இருந்து எதிர்த்து போராட இந்த செல்கள் வலுவுடன் இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் இதிலுள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு பண்புகளின் செயல்பாடுகளை துரிதப்படுத்துகிறது.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த
கேரட்டில் GIன் அளவு குறைவு, எனவே சர்க்கரை நோயாளிகள் தயக்கமின்றி கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பிரெட், உருளைக்கிழங்கு போன்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில் கேரட் சர்க்கரையின் அளவை அதிகரிக்காது என்பதால் சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிடலாம்.
மேலும் இதிலுள்ள பொட்டாசியம் ரத்த நாளங்கள் மற்றும் தமனிகளின் செயல்பாடுகள் சீராக நடைபெற உதவிபுரிகின்றன.
ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது
Carotenoids மற்றும் Anthocyanins என்ற ஆன்டி ஆக்சிடன்டுகள் கேரட்டில் அதிகம் நிறைந்துள்ளன, இவைகள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.
இதயத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க இவை அவசியம் என்பதால் தினமும் கேரட் சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும்.
கொலஸ்ட்ராலை குறைக்கும்
கேரட்டில் அதிகம் நிறைந்துள்ள கரையும் நார்ச்சத்துக்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் கொலஸ்ட்ராலை குறைக்கும், இதனால் ரத்தத்தில் LDL கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது.
கொலஸ்ட்ரால் அதிகமாகும் பட்சத்தில் இதயம் தொடர்பான நோய்கள் நம்மை பயமுறுத்தும், எனவே தினமும் கேரட்டை எடுத்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்.
எனவே தான் இதய நோயால் அவதிப்படும் நபர்கள் தினமும் சிறிதளவு கேரட்டை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
அழகான முடி மற்றும் சரும பாதுகாப்பிற்கு
தினமும் கேரட்டை உட்கொண்டு வந்தால், பொலிவான சருமம் மற்றும் ஆரோக்கியமான முடியினை பெறலாம்.
இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சி பண்புகள் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பீட்டா கரோட்டின்கள் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து நமது தோலை பாதுகாக்கிறது.
குறிப்பாக விட்டமின் இ, வயதான தோற்றம் ஏற்படாமல் முதுமையை தள்ளிப்போடுவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
எதனுடன் கலந்து சாப்பிடலாம்?
- கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
- பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
- கேரட்டை அரைத்து ஜுஸாகக் குடித்தால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி இருப்பவர்களுக்கு மருந்தாகும்.
- ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும்.
- சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம்.
- புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது நல்லது.
- கேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பூன் தனியா பொடி, மல்லி, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர வயிற்றுப்புண் சரியாகும்.
- கேரட் சாறுடன் இஞ்சி சாறு சேர்ந்து குடித்தால் உடல் எடையை குறைக்கலாம், வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் நல்ல பலனை தரும்.
குறிப்பு
வேகவைத்த கேரட்டுகளை விட, வேகவைக்காமல் அப்படியே கேரட்டுகளை சாப்பிட்டால் முழு பலனை பெறலாம், நார்ச்சத்தும் முழுமையாக கிடைக்கும்.