சொந்த காணிகளைக் கோரி முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
முல்லைத்தீவு-கேப்பாபிலவு விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியில் கடந்த 31ஆம் திகதி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை விடிய விடிய முற்றுகை போராட்டம் பொது மக்களினால் தொடரப்பட்டுகின்றது. மக்களின் வேண்டுகோள் நியாயமானது. இத்தகைய பின்னணியில் மக்கள் இன்று வரை போலி வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் புதுக்குடியிருப்பு படைமுகாம் அமைந்துள்ள பகுதியில் 18 ஏக்கர் காணியை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் கடந்த 5 தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் நேற்றையதினம் படைத்தரப்பிலும், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி, காணிகள் தனியாருக்கு உரியவை என்று உறுதியானால், அவற்றை படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று படைத்தரப்பில் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் கேப்பாபுலவு காணி தொடர்பான அறிக்கை ஒன்று வான்படையினரிடம் நேற்று கையளிக்கப்பட்டதாக, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
அத்துடன் அதேபோன்ற அறிக்கை ஒன்று புதுக்குடியிருப்பு காணி தொடர்பிலும் தயாரிக்கப்பட்டு படைத்தரப்புக்கு வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்திருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
இந்த விடயம் இரவு பகலாக போராடும் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி அழிக்குமா…..?
கேப்பாப்பிலவு மக்கள் அவர்களின் உரிமையை தான் கேட்டுக்கொண்டார்கள். போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் தங்களின் போராட்டம் தொடர்பாக இரா.சம்பந்தன் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இரா.சம்பந்தன் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரவு பகலாக தொடரும் போராட்டத்திற்கு முற்றுபுள்ளி வைப்பாரா..?
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியில் மக்களால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துவிட்டது என்பதும் சுட்டடிக்காட்டத்தக்க விடயமாகும்.