அ.தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா நடராஜன் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் பதவியேற்பதில் குழப்ப நிலை தோன்றியுள்ளது.
ஆளுனர் வருகை உறுதியாகததால் பதவி ஏற்பதை அறிவிக்க முடியாமல் அ.தி.மு.க தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர்
அ.தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா நடராஜன் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் முதல்வராக பதவியேற்கிவுள்ளதாக கூறப்பட்டது.
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) பதவியேற்பு விழா நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த விழாவில், 32 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொள்வார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால், நேற்று (திங்கட்கிழமை) சசிகலா மீது உள்ள சொத்து குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று அறிவித்தது.
இதனால் அவசர அவசரமாக, இன்று (செவ்வாய்கிழமை) சசிகலா மற்றும் அமைச்சர்கள் பதவியேற்க முடிவு செய்து,சென்னை பல்கலைக்கழகம் சென்று அங்குள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தை ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து சென்னை மாநகர பொலிஸ் ஆளுனர் ஜோர்ஜும் சென்னை பல்கலைக்கழகம் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்
இதைத்தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் தமிழக முதல்வராக சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் எனவும், தொடர்ந்து, 32 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலை தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் வருகை தருந்தால் காலை 8.40 மணிக்கு பதவி ஏற்பு நடைபெறும். அல்லது மாலையில் பதவி ஏற்பு நடைபெறும் என்று கூறப்பட்டது.
ஆனால் ஆளுனர் வருகை குறித்து உறுதி செய்யப்படாததால் பதவியேற்பையும் உறுதிப்படுத்த முடியாமல் அதிகாரிகளும், அ.தி.மு.க-வினரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், சசிகலா முதல்வராக பதவியேற்க இருந்த சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போடப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்று இரவு திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டது.
சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்களுக்கும் விழாவுக்கு வர வேண்டாம். மீண்டும் தகவல் தெரிவிக்கும் போது வாருங்கள் என்று அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் இருந்து அறிவிக்கப்பட்டது.
இதனால் சசிகலாவை வரவேற்க செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை சென்னை அ.தி.மு.க-வினர் கைவிட்டனர். அத்தோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் முதல்வராக பதவியேற்க கூடாது என்ற கருத்தையும் பலர் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.