அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் பயங்கரவாதத்தை முறியடிக்கப் போராடவிருப்பதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளார்.
அமெரிக்காவில் பயங்கரவாதிகள் வேரூன்றி செயல்படுவதை அவை தடுக்கும் என்றார் அவர்.
ஐ. எஸ். அமைப்பைத் தோற்கடிப்பதற்கான தமது உத்தி பற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை.
ஃபுளோரிடாவின் மெக்டில் ஆகாயப் படைத் தளத்தில் உள்ள அமெரிக்க மத்திய ஆணையகத்துக்குச் சென்றிருந்தபோது அதிபர் டிரம்ப் அவ்வாறு சொன்னார்.
ஈராக்கிலும் சிரியாவிலும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தலைமையில், ஐ. எஸ். அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்துவது பற்றியும் திரு டிரம்ப் பேசவில்லை.
இருப்பினும், அமெரிக்க ராணுவத்துக்கு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதலீடு செய்யவிருப்பதாக அவர் உறுதியளித்தார்.
முதலீடு செய்யவிருக்கும் தொகை பற்றி அவர் குறிப்பிடவில்லை.
ஐ. எஸ். அமைப்பின் போராளிகள், இனப் படுகொலைக்கான இயக்கத்தை வழிநடத்தி உலகம் முழுவதும் அட்டூழியம் புரிவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.