நாட்டிற்குள் நடந்து வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றுதம் போராட்டங்கள் என்பன பெரும்பாலும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போது, அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஏதுவான காரணம் என்ன என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேவையேற்பட்டால், பொலிஸார் கட்டுப்படுத்தக் கூடிய நிலைமையிலேயே நாட்டில் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருவதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் நாடு முழுவதும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதன் காரணமாக பொலிஸார், இராணுவத்தினர், அதிரடிப்படையினர், கலகத் தடுப்பு பொலிஸார் நாடு முழுவதும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமடைந்து வரும் போராட்டங்களை அடுத்து நேற்றிரவு நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகாத நிலையில் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை அடக்கும் நோக்கில் ஜனாதிபதி அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.