4வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8500 வீரர்கள் பங்கேற்பார்கள் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
4 வது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஜூன் 4 முதல் ஜூன் 13 வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெற உள்ளது.
இந்த விளையாட்டு போட்டிக்கான லோகோ, ஜெர்சி மற்றும் சின்னம் உள்ளிட்டவற்றை பஞ்ச்குலாவில் உள்ள இந்திரதனுஷ் அரங்கில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், 4வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 8500 வீரர்கள் பங்கேற்பார்கள் என்றார்.
நாட்டின் மக்கள்தொகையில் வெறும் 2% மட்டுமே உள்ள ஹரியானா மாநிலத்தில் பெரும்பாலான விளையாட்டு நிகழ்வுகளில் வீரர்கள் பங்கேற்று அதிக பதக்கங்களை வென்றுள்ளனர் என்று கூறினார்.
கட்கா, களரிபயட்டு, தங்-டா, மல்லகம்பா மற்றும் யோகாசனம் ஆகிய ஐந்து பாரம்பரிய விளையாட்டுகள் வரவிருக்கும் கேலோ இந்தியா போட்டிகளில் இடம் பெறும் என்றும் அவர் கூறினார்.
அண்மையில் முடிவடைந்த கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி நிச்சயமாக இளைஞர்களை எதிர்காலத்தில் பெரிய இலக்குகளை நோக்கிச் செல்ல ஊக்குவிக்கும் என்றும், விளையாட்டு வீரர்களை சிறப்பாக செயல்பட வைக்கும் முயற்சியில் மத்திய அரசு உறுதியாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில், ஹரியானா முதல்வர் மனோகர் லால், துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா, மத்திய ஜல் சக்தி துறை இணை மந்திரி
ரத்தன் லால் கட்டாரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.