அண்மைக்காலமாக வடக்கில் மீண்டும் புலிகள் வந்து விட்டார்கள் என்ற கருத்து வலுப்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக இதனை நல்லாட்சிக்கு எதிரானவர்களே தெரிவித்து கொண்டு வருகின்றார்கள்.
வடக்கு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ள போதும் அதற்கு மாற்று கருத்து வெளி வந்தவண்ணமே இருக்கின்றது.
தென்னிலங்கை ஊடகங்கள் சிலவும் இதனை செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இப்போது பிரபாகரனின் மரண சர்ச்சையும் பூதாகரமாக உருவெடுக்க ஆரம்பித்து விட்டது எனவும் கூறப்படுகின்றது.
மீண்டும் புலிகள் என்ற கருத்தின் உண்மைத்தன்மையினை அறிந்து கொள்ள முடியாமல் செய்திகளை பிரசுரிப்பது ஒரு வகையில் நாட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் செயல் என்றே அரசியல் நோக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு சமூக வலைத்தளங்களிலும் தற்போது இவை பரப்பப்பட்டு வருகின்றது. ஒரு வகையில் இது இனவாதத்தை தூண்டும் செயலே.
வடக்கில் இடம் பெறும் ஒவ்வொரு சம்பவத்தையும், அப்படியே திசை திருப்பி விடுதலைப் புலிகள் என சித்தரித்து வரப்படுகின்றது.
அதன் உச்ச கட்டமாக நேற்று இலங்கை இராணுவத்திற்கும், வடக்கு தமிழ் மக்களுக்கும் இடம்பெற்ற ஒரு சாதாரண வாக்கு வாதத்தை இனவாதமாகவும் விடுதலைப்புலிகளின் செயலாகவும் சித்தரிக்கப்பட்டு விமர்சனங்கள் பரப்பப்படுகின்றது.
அதனை அடிப்படையாக கொண்டு “மீண்டும் அடி வாங்க தயாராகி விட்டார்கள் தமிழர்கள்” என்றும் இனவாதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
வேகமாக செய்திகள் பரவும் சமூக வலைத்தளங்கள் மூலமாக இது மக்களிடையே எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.
அத்தோடு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறி இலங்கை அரசு வெளியிட்ட புகைப்படமும் கூட சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
“பிரபாகரனுக்கு ஏன் இலங்கை அரசு இன்றும் மரண சான்றிதழ் வழங்காமல் மறைத்து வருகின்றது, இதில் உள்நோக்கம் காணப்படுகின்றது”
“இலங்கை அரசு இதற்காக தீர்வை கொடுக்க வேண்டும்” என பல விதமாக கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றது.
முக்கியமாக இனவாத வகையில் கருத்து வெளியிட்ட நபர்களும் கூட இதனை கூறிவருகின்றனர். இது வரையில் அரசியல் தலைவர்கள் கூறிவந்த பிரச்சினை தற்போது அதிகமான மக்களால் விமர்சிக்க ஆரப்பிக்கப்பட்டு விட்டது.
மீண்டும் விடுதலைப் புலிகள் என்ற கருத்து தென்னிலங்கையில் பரப்பி வருவதோடு பிரபாகரனின் மரண சான்றிதழ் தொடர்பாகவும் விமர்சனங்கள் அதிகரித்து விட்டன.
அந்த வகையில் பிரபாகரனின் மரண சர்ச்சை தென்னிலங்கை மக்களிடையேயும் கருத்துக் கணிப்பாக மாறி வருகின்றது என்பது இவற்றின் மூலம் தெளிவாகின்றது.
இது ஒரு வகையில் அரசுக்கு எதிராக இந்த பிரச்சினை பூதாகரமாக வெடிக்கக் கூடும், அதற்காகவே மீண்டும் புலிகள் என்ற கருத்து வலுப்படுத்தப்பட்டு வருகின்றது என தென்னிலங்கை புத்திஜுவிகள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் இது இப்போதைய அரசுக்கு வந்த சிக்கலா? கடந்த கால ஆட்சிக்கு வந்த சிக்கலா? தமிழ் மக்களுக்கு வரும் சிக்கலா? என்பது தொடர்பில் மட்டும் தெரியவில்லை.
என்ற போதும் சமூக வலைத்தளங்கள் என்பது இப்போதைக்கு அரசியலிலும் சரி சமூகத்திலும் சரி பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் ஒன்றாக மாற்றம் அடைந்து விட்டது என்பது உண்மையே.