, இரண்டு விரல்களை விட்டவரின் விரல் இடுக்கில் ஒரு கல் தட்டுப்பட்டது. அதனை வெளியில் எடுத்தவருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து வெளிப்ப
குருசேத்திர யுத்தம் முடிந்து, யுதிஷ்டிரர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அர்ச்சுனன் தனது நண்பரும், பகவானுமான கிருஷ்ணருடன் ஊர் ஊராகச் சென்று, சில நாட்கள் தங்கி அங்குள்ள மக்களுக்கு ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என்பதை அறிந்து வந்தான்.
அப்படி கண்ணனும், அர்ச்சுனனும் ஒரு ஊருக்குச் சென்றபோது, முதியவர் ஒருவர் அவர்களின் தேருக்கு முன்பாக வந்து நின்றார். அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையில் வாடியது. அந்த வறுமையைப் போக்குவதற்கு ஏதாவது உதவி கேட்டுதான், தேரின் முன்பாக வந்து நின்றார் அந்த முதியவர்.
அர்ச்சுனன் தன் பக்கத்தில் இருந்த பொற்காசுகளின் மூட்டைக்குள் கையை விட்டு, அதில் வந்த பொற்காசுகள் அனைத்தையும் முதியவருக்குக் கொடுத்தான். இப்படி மூன்று முறை அர்ச்சுனன் வழங்கிய பொற்காசுகளை பெற்றுக்கொண்டவர், ‘இது பல ஆண்டுகளுக்கு என்னுடைய குடும்பத் தேவையை பூர்த்தி செய்யும்’ என்றபடி அங்கிருந்து அகன்றார்.
ஆனால் அவர் செல்லும் வழியில் வந்த திருடன் ஒருவன், அவரிடம் இருந்து பொற்காசு மூட்டையை பறித்துச் சென்று விட்டான். மறுநாள் மீண்டும் அர்ச்சுனன் முன்பாக வந்து நின்றார் முதியவர். தான் திருடன் ஒருவனிடம் பொற்காசுகளை பறிகொடுத்ததைப் பற்றிச் சொன்னார்.
இதையடுத்து அர்ச்சுனன் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த ரத்தினக்கல் ஒன்றை முதியவரிடம் கொடுத்தான். அதைப் பெற்றுச் சென்றவர், தன் மனைவி, பிள்ளைகளுக்குக் கூட தெரியாதபடி, அந்த ரத்தினக்கல்லை, பரண் மீது இருந்து பானையில் ஒளித்து வைத்தார்.
இதை அறியாத முதியவர் மனைவி, பானையை எடுத்துச் சென்று ஆற்றில் தண்ணீர் எடுத்தார். அப்போது உள்ளே இருந்த ரத்தினக் கல், ஆற்றில் விழுந்து விட்டது. மனைவி பானையில் தண்ணீர் பிடித்து விட்டு வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முதியவர், “பானைக்குள் இருந்த கல் எங்கே?” என்று கேட்க, அவரது மனைவியோ ஒன்றும் புரியாமல் விழித்தார்.
மனைவியிடம் உண்மையைக் கூறியவர், ஆற்றிற்குச் சென்று தேடியபோதும், அந்த ரத்தினக்கல் கிடைக்கவில்லை.
சில நாட்கள் கழித்து, மீண்டும் அர்ச்சுனனை சந்திக்க வந்த முதியவர், நடந்த விவரங்களைக் கூறினார்.
அப்போது அருகில் இருந்த கண்ணன், “அர்ச்சுனா.. இவரது விதி வலியதாக இருக்கிறது. இந்த முறை வெறும் இரண்டு பொற்காசுகளை மட்டும் இவருக்குக் கொடு” என்றார். அப்படியேச் செய்த அர்ச்சுனன், முதியவர் அங்கிருந்து அகன்றதும், “இரண்டு பொற்காசுகள் அந்த நபரின் வாழ்க்கையை எப்படி மாற்றும் கண்ணா?” என்று கேட்டான்.
“அதை நேரடியாக பார்க்கலாம்.. வா..” என்று அர்ச்சுனை அழைத்துக் கொண்டு, முதியவரை பின் தொடர்ந்தார் கண்ணன்.
அர்ச்சுனனிடம் பொற்காசுகளைப் பெற்றவர், ஆற்றங்கரை ஓரமாக நடந்து சென்றார். அப்போது ஒரு மீனவன், தன்னுடைய படகில் இருந்த சிறிய தண்ணீர் தொட்டியில் இரண்டு மீன்களை உயிருடன் வைத்திருந்தான். அதனை வாங்கிக்கொள்ளும்படி, முதியவரிடம் மீனவன் கேட்டான்.
‘இந்த மீன்களால் என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களின் ஒருநாள் பசியைக் கூட போக்க முடியாது. என்றாலும் அந்த மீன்களை மீண்டும் ஆற்றில் விட்டால் புண்ணியமாவது கிடைக்கும்’ என்று நினைத்தவர், தன்னிடம் இருந்த இரண்டு பொற்காசுகளையும் கொடுத்து அந்த இரண்டு மீன்களையும் வாங்கினார்.
அதில் ஒன்றை தண்ணீரில் விட்டார். மற்றொன்றையும் தண்ணீரில் விட முயன்றபோது, அதன் வாய் பகுதியில் ஏதோ ஒன்று மின்னுவதைக் கண்டார். மீனின் வாயை கொஞ்சம் பிளந்து, இரண்டு விரல்களை விட்டவரின் விரல் இடுக்கில் ஒரு கல் தட்டுப்பட்டது. அதனை வெளியில் எடுத்தவருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து வெளிப்பட்டது.
ஏனெனில் இதற்கு முன்பு அர்ச்சுனன் கொடுத்திருந்த ரத்தினக்கல் அது. ஆற்றில் விழுந்த கல்லை, அந்த மீன் விழுங்கியிருந்தது. மகிழ்ச்சியில், ‘சிக்கியாச்சு.. சிக்கியாச்சு..’ என்று கூச்சலிட்டார்.
அப்போது ஏற்கனவே முதியவரிடம் இருந்து கொள்ளையடித்திருந்த திருடன், தன்னைத்தான் சொல்கிறார் என்று நினைத்து பதற்றத்துடன் ஓட நினைத்தான். அவனை மடக்கிப்பிடித்த அர்ச்சுனனும், கண்ணனும், அவன் மறைத்து வைத்திருந்த பொற்காசுகளை பறிமுதல் செய்து, முதியவரிடம் கொடுத்தனர்.
அதையும் பெற்றுக்கொண்ட அந்த முதியவர், மகிழ்ச்சியோடு வீட்டிற்குச் சென்றார். அதைக் கண்ட அர்ச்சுனன், “வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது. இதுபோன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியமாகின்றன” என்று கண்ணனிடம் கேட்டான்.
அதற்கு கண்ணன், “முன்பு நீ கொடுத்த பொற்காசுகளை தன் குடும்பம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று முதியவர் நினைத்தார். அதைபோல் மறுமுறை நீ கொடுத்த ரத்தினக் கல்லை, தானும் உபயோகிக்காமல், மற்றவர்களுக்கும் தெரியாமல் ஒளித்துவைத்தார். அவரது இந்த சுயநலம் காரணமாக, அந்தப் பொருட்கள் எதுவும் அவரிடம் தங்கவில்லை. ஆனால் இந்த முறை பொதுநலத்துடன் இரண்டு மீன்களை காப்பாற்ற நினைத்தார். அந்த புண்ணியத்தின் பலன், அவருக்கு இழந்த செல்வத்தையும் மீட்டுக் கொடுத்துள்ளது” என்று விளக்கினார்.