தங்கள் நாட்டு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் மேற்கொள்ளப்படும் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருளில் 3இல் ஒரு பங்கு, உக்ரைன் வழியாக குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 11 வாரங்கள் ஆன நிலையிலும், அந்த நாட்டு வழியாக இதுவரை ரஷ்ய எரிபொருள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய எரிவாயு கொண்டு செல்லப்படும் வழித்தடத்தில் நேற்று (புதன்கிழமை) முதல் தடை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
இதுகுறித்து உக்ரைனில் எரிவாயு விநியோகத்தை கவனித்து வரும் ஜிடிஎஸ்ஓயு அமைப்பு கூறுகையில், உக்ரைன் வழியாக குழாய் மூலம் அனுப்பப்படும் ரஷ்ய எரிவாயுவை ரஷியப் படையினர் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாஸ் பகுதிகளுக்கு அனுப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எதையும் ஜிடிஎஸ்ஓயு வெளியிடவில்லை. ரஷ்யாவின் இந்தச் செயலைக் கண்டித்து, சோக்ரானிவ்கா வழியாக அனுப்படும் ரஷ்ய எரிவாயு விநியோகத்தை புதன்கிழமை முதல் தடுத்து நிறுத்தியதாக ஜிடிஎஸ்ஓயு தெரிவித்துள்ளது.
இது குறித்து தங்களுக்கு உக்ரைன் முன்கூட்டியே தகவல் அளித்ததாக ரஷ்ய பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான கேஸ்ப்ராம் தெரிவித்தது. சோக்ரானிவ்கா வழித்தட எரிவாயு விநியோகம் புதன்கிழமை காலை 7 மணி முதல் (உள்ளூர் நேரம்) நிறுத்தப்படும் என்று தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக கேஸ்ப்ராம் கூறியது.
எனினும், ஐரோப்பிய நாடுகளுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள அளவுக்கு எரிவாயுவை தொடர்ந்து அனுப்புவதில் தாங்கள் உறுதியுடன் இருப்பதாக கேஸ்ப்ராம் தெரிவித்தது.
ஐரோப்பிய நாடுகளில் சமையல் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் ரஷ்ய எரிவாயு விநியோகத்தை உக்ரைன் தங்கள் வழித்தடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளால், எரிசக்தி மற்றும் நிதிச் சந்தை துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை.
உக்ரைன் வழியாக ரஷ்ய எரிவாயு விநியோகிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படுவதால், ரஷ்ய பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் உடனடி தகவல் இல்லை. ஏற்கெனவே மேற்கொள்ள ஒப்பந்தங்களின்படி, ஐரோப்பிய நாடுகளுக்கு எரிபொருளை அனுப்ப ரஷ்யாவுக்கு போதிய அளவுக்கு மாற்று வழிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், உக்ரைனின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு ஜேர்மனியில் ரஷ்ய எரிவாயு வரத்து முந்தைய நாளைவிட 25 சதவீதம் குறைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.