வடகொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் (பிஏ.2 வகை வைரஸ்) தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பியோங்யாங்கில் பிஏ.2 எனப்படும், அதிக அளவில் பரவக்கூடிய ஓமிக்ரோன் வைரஸின் துணை மாறுபாடு கண்டறியப்பட்டதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, வடகொரிய தலைவர் கடுமையான தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளார். அத்துடன் தொற்று நோயை விரைவாக அகற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார்.
ஓமிக்ரோன் மாறுபாட்டின் கண்டுபிடிப்பு வட கொரியாவிற்கு ஒரு தீவிரமான ஆபத்தை அளிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, அதன் 25 மில்லியன் மக்களில் யாருக்கும் தடுப்பூசி போடவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற கோவாக்ஸ் விநியோகத் திட்டத்தால் வழங்கப்பட்ட தடுப்பூசிகளை நாடு இதுவரை புறக்கணித்துள்ளது. ஏனெனில் தடுப்பூசிகளை நிர்வகிப்பதற்கு சர்வதேச கண்காணிப்பு தேவைப்படும்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கொரோனா பரவல் குறித்து வடகொரியா தொழிலாளர் கட்சி ஆலோசனை நடத்தியதாகவும் இந்த ஆலோசனையின்போது தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து வடகொரியாவில் எத்தகைய பாதிப்பும் பதிவு செய்யப்படாமல் இருந்து வந்தது. கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி வருவதாக வடகொரியா தெரிவித்து வந்தது.
ஆனால், தற்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் நிலவி வந்த நிலையில் தற்போது அங்கு வைரஸ் தொற்றுப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.