ஸ்பெயினில் 350க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20 செண்ட் தள்ளுபடி வழங்கப்படும் என ஸ்பெயின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் அறிவித்திருந்தார்.
இந்த மானியத்திற்காக அரசு 15 செண்ட் செலுத்தும் என்றும் பெட்ரோல் நிலையங்கள் 5 செண்ட் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அரசின் இந்த கொள்கை முடிவு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சிறு மற்றும் நடுத்தர பெட்ரோல் நிலையங்களுக்கு இதனால் பெருத்த இழப்பு ஏற்படும் என எதிர்ப்பு கிளம்பின.
இதனால் 350க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே நிலை தொடர்ந்தால் நாடு முழுவதும் சுமார் 3,000 முதல் 4,000 பெட்ரோல் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என அந்நாட்டின் எரிபொருள் விநியோகஸ்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் மற்றும் கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.