ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்போதே பிரதமர் பதவி தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க இணக்கம் காணப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று அல்லது நாளை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதுடன், அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழுவும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரதமர் பதவிக்கு மூன்று பெயர்களை முன்மொழிவதற்கு அரசாங்கத்தின் சுயேச்சைக் குழுவொன்று தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களான விஜேதாச ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரை அந்த பதவிக்கு நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.