யாழ்ப்பாணம் – மானிப்பாயில் வீடுடைத்து 30 லட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று (14) இடம்பெற்றுள்ளது.
அவர்களிடமிருந்த திருட்டு நகைகளை விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 4ஆம் திகதி மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் தொட்டிலடியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற கொல்லைச்சம்பவத்தில் 30 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.
இதுதொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரினால் செய்த முறைப்பாட்டிற்கமைய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து குறித்த பகுதிகளில் பெறப்பட்ட சிசிரிவி காணொளிப் பதிவுகளின் அடிப்படையில் தெல்லிப்பழை வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருட்டு நகைகளை விற்பனை செய்ய உதவினார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.