பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக, கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் உறுப்பினர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் சுமார் 10.30 மணிக்கு கூட்டம் துவங்கியுள்ளது. இதில் சுமார் 65 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 9ம் திகதி உறுப்பினர்கள் பலரது வீடுகள், சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதால் கூட்டம் ஆரம்பம் முதலே சூடான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதியை சுற்றிவளைத்து தமது துயரத்தை வெளிப்படுத்திய உறுப்பினர்கள் தமது சொத்துக்களை பாதுகாக்க தவறியதாக பொலிஸ் மா அதிபரையும் இராணுவத் தளபதியையும் கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதற்கமைய, ஜனாதிபதி அந்தக் கூட்டத்திற்கு பொலிஸ் மா அதிபர் சீ. டி. விக்ரமரத்னவுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை கடுமையாக திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்களுக்கு இதனைவிடவும் கூடுதல் பாதுகாப்பு வழங்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று அவர்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், இதற்கான முழுப்பொறுப்பையும் பொலிஸ் மா அதிபர் ஏற்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுளு்ளார்.
இறுதியாக பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறியுள்ளதாக தகவல்கள் குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.