விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து ஹிந்து ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்கு பாதுகாப்பு அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது. குறித்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றவை என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென” பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மீண்டும் இலங்கையில் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
“அதிகரித்து வரும் வன்முறைகளிற்கு மத்தியில் இலங்கை அவசரகால நிலையை இரண்டு தடவை பிரகடனம் செய்துள்ள நிலையில் சர்வதேச தொடர்புகளை கொண்டுள்ள புலம்பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினர் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் படையினருக்கும் இடையிலான மோதலில் தங்கள் பிரசன்னத்தையும் வெளிப்படுத்த முயல்கின்றனர் என அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, குறித்த செய்தியினை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இன உறவுகள் மேம்பட்டு வரும் இலங்கையின் இன்றைய சமூக சூழலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீள் உருவாக்கம் தொடர்பில் ஹிந்து வெளியிட்டுள்ள செய்தி மிகவும் கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மையானது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதனிடையே வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் இழந்த அன்புக்குரியவர்களை இந்த வாரம் நினைவு கூற இருக்கும் நிலையில், இந்த செய்தி வந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் நேக்கில் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை, ராஜபக்சர்களை பாதுகாப்பதற்காக மக்களின் கவனத்தை சிதறடிக்கும் நோக்கி இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.