சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பன்னீர் செல்வம் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீதும், கட்சியின் சில அமைச்சர்கள் மீதும் அதிரடியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். கட்சியின் தலைமை தன்னை நிர்பந்தப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருந்து பன்னீர் செல்வத்தை நீக்கி பொதுச் செயலாளர் சசிகலா நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் பன்னீர் செல்வம் நீக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, அதிமுகவில் எந்த பிரச்சனை இல்லை என்றும் சசிகலா நிச்சயம் முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் தம்பிதுரை உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜெயலலிதா கொடுத்த பதவியிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் இதனை கூறியுள்ளார்.