உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் பன்றிக்காய்ச்சலின் பிறப்பிடம் மெக்சிகோ. கடந்த 8 வருடங்களில் கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளையும் ஆக்கிரமித்துக்கொண்டது என்றே சொல்லலாம். தொடக்கத்தில் குளிர் நாடுகளை மட்டுமே இந்த நோய் தாக்கிக்கொண்டிருந்தது. அதனால் இந்தியா போன்ற வெப்பமான நாட்டில் இந்த நோய் பரவாது என்று இந்தியர்கள் கொஞ்சம் மெத்தனத்தில் இருந்தார்கள். ஆனால் இந்த நோயின் தீவிரம் எந்த நாட்டையும் விட்டுவைக்கவில்லை.
பன்றிகளிடம் இருந்து காற்றின் மூலம் இந்த கிருமிகள் மனிதர்களுக்கு பரவியதால் இதை பன்றிக்காய்ச்சல் என்கிறார்கள். இது ஒருவகை ப்ளூ காய்ச்சல். இந்த நோயை ஏற்படுத்தும் வைரஸின் பெயர் ‘ஸ்வைன் ப்ளூ’. இது மிகவும் நுணுக்கமான மரபணு தொகுதியை கொண்டது. பொதுவாக இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டால் மரணம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனாலும் ஒருவரின் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு தன்மை போன்றவற்றின் அடிப்படையில் மிக அரிதாக மரணம் ஏற்படலாம்.
இதனால் குழந்தைகள், முதியவர்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த வைரஸ் உடலில் நுழைந்ததும் முதலில் சளி பிடிக்கும். பின் தொண்டை வலியெடுக்கும். உடல் சோர்வடையும், வலி அதிகரிக்கும், பசியின்மை ஏற்படும், மெல்ல மெல்ல காய்ச்சல் உயர்ந்து கொண்டே வரும். 104 பாரன்ஹீட் என்ற அளவிற்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். தாக்கம் அதிகமானால் இருமல், மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. செயற்கை சுவாசம் தரவேண்டிய நிலை கூட வரலாம்.
நோய் தாக்கிய 7 நாட்கள் வரை இந்த வைரஸ் வீரியத்தோடு வேலை செய்யும். பாதிக்கப்பட்டவரிடமிருந்து 6 அடி தூரத்தில் இருப்பவர்களுக்கு கூட வெகு சாதாரணமாக பரவிவிடும். 7 நாட்களுக்குப் பிறகு நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும். இருமல், தும்மல் வழியாக காற்று மூலம் பரவும் இந்நோய் உணவின் மூலம் பரவுவதில்லை. வீட்டில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் வெகு எளிதாகவும், விரைவாகவும் மற்றவர்களுக்கு பரவி விடும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது.
இருமலின் போதும், தும்மலின் போதும் கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பரை பயன்படுத்தி பொத்திக்கொள்ள வேண்டும். அவற்றை பத்திரமாக அப்புறப்படுத்த வேண்டும். பன்றிக்காய்ச்சல் வந்தால் முதல் 48 மணி நேரத்துக்கு அதிக தாக்கம் இருக்கும். நமது நாட்டில் ஒருவருக்கு வந்திருப்பது பன்றிக்காய்ச்சல்தானா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கே 48 மணி நேரம் பிடிக்கும் என்பதால் பன்றிக்காய்ச்சல் சிகிச்சை ஒரு சவாலாகவே இருக்கிறது. சோதனைகளை எளிதாக்குவதன்மூலமே, இந்த பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும்.