முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானின் போலி ராஜதந்திர கடவுச்சீட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போலிக் கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி பிரித்தானியாவிற்கு பயணம் செய்தமை குறித்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் குறித்து கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்கவிடம், இரகசிய பொலிஸார் தகவல்களை சமர்ப்பித்துள்ளனர்.
போலிக் கடவுச்சீட்டு ஊடாக கருணா நாட்டின் குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துஸ்மந்த குணவர்தன என்ற பெயரில் D 1944260 என்ற இலக்கத்தைக் கொண்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி கருணா, பிரித்தானியா பயணித்துள்ளார்.
2009ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ம் திகதி கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இங்கிலாந்து நீதிமன்றிலும் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போலிக் கடவுச்சீட்டு பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி கொழும்பு நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 18ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.