யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு சிறிலங்காப் படைகள் இரண்டு தடவைகள் மறுப்புத் தெரிவித்தமையால், இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக, முன்னாள் சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூறியிருக்கிறார்.
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜதந்திரியான, பீற்றர் கல்பிராய்த்திடமே, (Peter Galbraith) ஜே.ஆர்.ஜெயவர்த்தன இதனைக் கூறியிருக்கிறார்.
இந்திய – சிறிலங்கா உடன்பாடு கையெழுத்திடப்பட்டு, இந்திய அமைதிப்படை, சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்டு 30 ஆண்டுகள் கழித்து, இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.
1988ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், சிறிலங்காவின் அப்போதைய அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன், அமெரிக்க இராஜதந்திரி, பீற்றர் கல்பிராய்த் மேற்கொண்ட கலந்துரையாடல் தொடர்பாக சிஐஏ அனுப்பியிருந்த இரகசிய ஆவணம் ஒன்றிலேயே இந்த தகவல் உள்ளடங்கியிருக்கிறது.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற படைகளுக்குத் தாம் இரண்டு தடவைகள் உத்தரவிட்டதாகவும், ஆனால் அதிக இழப்புகள் ஏற்படும் என்று அவர்கள் அதனை நிராகரித்து விட்டதாகவும், அமெரிக்க இராஜதந்திரியிடம் ஜே.ஆர். ஜெயவர்த்தன கூறியிருக்கிறார்.
இதன் பின்னரே, தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்கவும், தமிழை அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கவும், இணக்கம் தெரிவித்து, இந்தியாவுடன் உடன்பாடு செய்ய முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த உடன்பாட்டின் படி இந்தியா இராணுவ உதவிகளை வழங்க முன்வந்தது என்றும் ஜே.ஆர். தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் விட்டுக் கொடுப்பற்ற விரோதப் போக்கு தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த ஜே.ஆர் பிரபாகரனை முட்டாள் மனிதன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
வேறு வழியின்றியே இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்ள நேரிட்டதாகவும் ஜே.ஆர். ஜெயவர்த்தன, அமெரிக்க இராஜதந்திரியிடம் கூறியதாக, சிஐஏ ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.