தமிழ் மக்களை தொடர்ந்தும் திறந்தவெளி சிறைச்சாலையில் வைத்திருக்க இந்த அரசாங்கம் விரும்புகின்றதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் பெற்று வருகின்றனர் என பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்ற நிலையில், நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் சிறிதரன் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
குறிப்பாக, யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா.வுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாத நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை குறைத்துக்கொள்ளும் நோக்கில் அரசாங்கம் புலி பிரசாரத்தை மேற்கொள்கின்றதா என அவர் தொடர்ந்து கேள்வியெழுப்பினார்.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்வதற்கு முன்னாள் போராளிகள் திட்டமிட்டுள்ளதாகவும், சிலர் கைதுசெய்யப்பட்டும் உள்ள நிலையில இவ்வாறு போலியான நாடகங்களை அரங்கேற்றி பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் வைத்திருக்க அரசாங்கம் விரும்புகின்றதா என்றும் சிறிதரன் கேள்வியெழுப்பினார்.