அதிமுக தலைவர் மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமாக இருந்த செல்வி ஜெயலலிதா கடந்த 2015 ஏப்ரம் மாதம் நடந்த தேர்தலின் போது தனது சொத்து மதிப்பை 113.73 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இப்போது ஜெயலலிதாவைச் சார்ந்தவர்கள் யாரும் இல்லாத போது அவர் கணக்கில் காட்டிய சொத்துக்கள் யாருக்குப் போய் சேரும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்த நிலையில், கட்சியும், கட்சி தலைமை பொறுப்பும் ஜெ. அவர்களின் தோழியான சசிகலா கையில் இருக்கும் நிலையில். ஐெ. சொத்துக்கள் யாருக்குச் சேர வாய்ப்புள்ளது என்று இங்குப் பார்ப்போம்.
வீடு
1967 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் அம்மாவால் 1.32 லட்சத்திற்கு வாங்கப்பட்ட வீடு தான் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம்.
24,000 சதுர அடி பரப்பு உள்ள இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 43.96 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
இந்த வீடு ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா நடராஜனுக்குச் செல்லலாம் என்று கூறப்படுகிறது.
பிற சொத்துக்கள்
தெலுங்கான, ரங்கா டெட்டி மாவட்டத்தில் உள்ள ஜேடிமெட்லா கிராமத்தில் 14.50 ஏக்கர் விவசாய நிலமும், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யூர் கிராமத்தில் 3.43 ஏக்கர் சொத்தும் இவருக்குச் சொந்தமாக உள்ளது.
இவை இரண்டும் கூட அவரது அம்மாவுடைய காலத்தில் வாங்கிய சொத்துகள் என்றும் இந்தச் சொத்துக்கள் வி என் சுதாகரனுக்கு சேர வாய்ப்பு உள்ளதாகவும் செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.
கார்கள்
இரண்டு டொயோட்டா ப்ராடோ எஸ்யூவி கார்கள், ஒரு டெம்போ டிராவலர், ஒரு டெம்போ ட்ராக்ஸ், ஒரு மஹிந்திரா ஜீப், ஒரு 1980 மாடல் அம்பாசிடர் கார், ஒரு மஹிந்திரா பொலிரோ, ஸ்வராஜ் மஸ்தா மாக்ஸி, மற்றும் 1990 ஆம் ஆண்டு மாடல் கோமகள் இவருக்கு சொந்தமான கார்கள் ஆகும். இந்த கார்களின் மதிப்பு மட்டும் 42,25,000 ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
நகைகள்
21,280.300 கிராம்கள் தங்க நகை சொத்து குவிப்பு காரணத்தினால் கர்நாடக அரசு கஜானாவில் உள்ளது. இந்த வழக்கிற்கான மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரிடம் 1,250 கிலோ வெள்ளி நகைகள் உள்ளதாகவும் அதன் மதிப்பு 3,12,50,000 ரூபாயாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்
2016 ஆண்டு ஆர்கே நகர் தேர்தலின் போது இவர் காண்பித்த சொத்து கணக்கின் படி 41.63 கோடி ரூபாய் அசையும் சொத்தும், 72.09 கோடி ரூபாய் அசையா சொத்துக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதலீடுகள் மற்றும் பங்குகள்
சொத்து குவிப்பு வழக்கில் இவர் நிறுவனங்களில் முதலீடு செய்ததுள்ளதாக கூறியவை எல்லாம் பரிமுதல் செய்யப்பட்டு உள்ளதும் இதற்கான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள்
ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ், கொடநாடு எஸ்டேட், ராயல் வேலி ஃபோரிடெக் ஏற்றுமதி மற்றும் க்ரீன் டி எஸ்டேட் ஐந்து நிறுவனங்களில் பங்குதாரராக 27.44 கோடிகள் முதலீடு செய்துள்ளார்.
மேலும் தேசிய சேமிப்பு திட்டங்கள், அஞ்சல் சேமிப்புத் திட்டங்கள் போன்றவற்றில் இவர் எந்த முதலீடு செய்யவில்லை. அதே போன்று இவர் யாருக்கும் கடனாகவும் பணம் அளிக்கவில்லை.
அதிமுக தலைவரான இவரின் பெயரில் 2015-2016 ஆம் நிதி ஆண்டு வரை வருமான வரி தாக்கல் செய்துள்ளது மற்றும் மதிப்பீடுகள் 2013-14 வரை நிறைவடைந்துள்ளன.
பணம்
இவருடைய கடைசி பிரகண்டத்தின் படி 41,000 ரூபாய் பணமாகவும், 2.04 கோடி ரூபாய் கடனாகவும், தனது தொழிலாக விவசாயத்தையும் இவர் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்பலோ மருந்துவமனை
முன்னாள் முதல்வர் ஜெ. அவர்களின் மரணம் குறித்தும் இன்னும் சந்தேகம் தீரவில்லை என தீபா ஆதரவாளர்கள் மற்றும் ஆதிமுக கட்சியின் ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் திங்கட்கிழமை ஜெ. அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.
மருத்துவர்களின் பதில்கள் கட்சியின் தொண்டர்களை நம்ப தகுந்த அளவிற்கு இல்லை என கருத்து நிலவி வருகிறது.