இந்த புத்தகத்திற்கு 50,000 பவுண்ட் பரிசுத்தொகை (இந்திய மதிப்பில் சுமார் 49 லட்சம் ரூபாய்) அடங்கிய சர்வதேச புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் எழுத்தப்பட்டு அல்லது மொழிபெயர்க்கப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் புகழ்வாய்ந்த இலக்கிய பரிசான, சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ, தனது ‘ரெட் சமாதி’ என்ற நாவலுக்காக புக்கர் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கீதாஞ்சலி ஸ்ரீயின் ரெட் சமாதி நாவல் ஆங்கிலத்தில் ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. பிரபல மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல்லால் என்பவர் ரெட் சமாதியை மொழிபெயர்த்தார்.
புக்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் இருந்து தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்தி மொழி புத்தகமும் இதுவேயாகும். இந்த புத்தகத்திற்கு 50,000 பவுண்ட் பரிசுத்தொகை (இந்திய மதிப்பில் சுமார் 49 லட்சம் ரூபாய்) அடங்கிய சர்வதேச புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளருக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.
இதுகுறித்து கீதாஞ்சலி ஸ்ரீ கூறியதாவது:-
புக்கர் பரிசு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை, நான் இதனை வெல்வேன் என்றும் நினைக்கவில்லை. புக்கர் விருதுக்கு தான் தேர்வாவேன் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. நான் தனிமை மற்றும் அமைதியில் வாழும் எழுத்தாளர். எனக்கு புக்கர் கிடைத்திருப்பது பெரிய அங்கீகாரம். இந்த சமயத்தில் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், பணிவாகவும் உணர்கிறேன். எனக்கும் இந்தப் புத்தகத்துக்கும் பின்னால், இந்தி மற்றும் பிற தெற்காசிய மொழிகளின் வளமான மற்றும் செழிப்பான இலக்கிய பாரம்பரியம் உள்ளது. இந்த மொழிகளில் உள்ள சில சிறந்த எழுத்தாளர்களை அறிந்து கொள்வதன் மூலம் உலக இலக்கியம் வளமடையும்.
இவ்வாறு கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.
ரெட் சமாதி என்ற இந்த நாவல் இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குடும்பக் கதை ஆகும். இந்நாவல், கணவர் இறந்த பிறகு வாழும் 80 வயதான ஒரு பெண்ணைப் பின்தொடர்கிறது.