தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் 2011-ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான படம் மங்கத்தா. இப்படத்தை தயாநிதி அழகிரியின் கிளெவுட் நயன் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மங்காத்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, மங்காத்தா 2-ஆம் பாகம் எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, சமீபத்தில் வெங்கட் பிரபு அளித்த பேட்டி ஒன்றில் மங்காத்தா 2-ஆம் பாகத்தின் கதை தயாராக இருப்பதாகவும் அஜித் அழைத்தால் எப்போது வேண்டுமானலும் கதை சொல்ல தயார் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அஜித்குமார் குடும்பமும், மங்காத்தா தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் குடும்பமும் சந்தித்துக் கொண்ட பொழுது எடுத்த புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து, மங்காத்தாவின் 2-ஆம் பாகம் குறித்த சந்திப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். விரைவில் இந்த சந்திப்பு குறித்தும் மங்காத்தா இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.