கேள்வி:- ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா அமைப்பு உங்களை எதிர்த்ததே?
பதில்:- ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். அதை மீட்பதற்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன. ஒரு தமிழனாக ஜல்லிக்கட்டுக்கு நான் ஆதரவு கொடுத்தேன். இதுதான் என்னுடைய முகம். முகத்திரை போட்டு இதனை மறைக்க முடியாது. எனது படத்தை விளம்பரப்படுத்த ஜல்லிக்கட்டுக்கு நான் ஆதரவு தருவதாக பீட்டா அமைப்பு விமர்சித்தது. இதற்காக அந்த அமைப்பை கண்டித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். பீட்டா அமைப்பு வருத்தம் தெரிவித்து உள்ளது.
கேள்வி:- சிங்கம் படத்தின் 4-ம் பாகம் வருமா?
பதில்:- காக்க காக்க படத்தில் நான் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் வரவேற்பை பெற்றது. சிங்கம் படத்தில் போலீஸ் அதிகாரி வேடம் ஏற்றபோது அதன் இரண்டாம் பாகம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ரசிகர்களுக்கு சிங்கம் படம் மிகவும் பிடித்து போனது. அதனால் இப்போது மூன்றாம் பாகம் வரை தயாராகி உள்ளது. 4-ம் பாகத்திலும் நடிக்க ஆர்வம் இருக்கிறது. 4-ம் பாகமும் வரலாம். டைரக்டர் ஹரி ராணுவ பின்னணியை மையமாக வைத்து ஒரு கதை தயார் செய்து உள்ளார். அதிலும் நான் நடிக்க இருக்கிறேன்.
கேள்வி:- சிங்கம்-3 படம் உண்மை கதையா?
பதில்:- தமிழகத்தில் எம்.ஜி. ஆரும் ஆந்திராவில் என்.டி.ராமராவும் முதல்வர்களாக இருந்தபோது ஆந்திர பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது ஆந்திர அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் ஆந்திர போலீசாருக்கு உதவ தமிழக போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.
கேள்வி:- இளம் இயக்குனரான விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கிறீர்களே?
பதில்:- இளம் டைரக்டர்களுடன் வேலை செய்யும்போது நம்மை புதுமையாக காட்டுவார்கள். ரஜினிகாந்தும் அப்படித்தான் ரஞ்சித்தின் கபாலி படத்தில் நடித்தார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டமும் நல்ல கதையம்சம் உள்ள படம்.
கேள்வி:- ஜோதிகாவுடன் இணைந்து நடிப்பீர்களா?
பதில்:- ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த 36 வயதினிலே படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மகளிர் மட்டும் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படம் திருமணமான பெண்களுக்கு புதிய உத்வேகத்தை தரும். ஒரு வருடத்துக்கு முன்பே ஜோதிகாவும் நானும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் நடக்கவில்லை. அவர் மீண்டும் நடிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு முன்னால் ஒரு படத்தில் சேர்ந்து நடித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.”
இவ்வாறு சூர்யா கூறினார்.