உலக புற்றுநோய் தினமானது உலகெங்கும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புற்றுநோய் பற்றிய பயம் மற்றும் தவறான கருத்துகளைப் போக்கவும் நம்பிக்கையை ஏற்படுத்தவும் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் தற்போது அதிகரித்துவரும் நோய்களில் ஒன்று. அதில் பத்து சதவீதம் மட்டுமே பரம்பரை நோயாக வர வாய்ப்புண்டு. மற்றவை எல்லாம் தனி ஒருவரை மட்டுமே பாதிக்கும் தன்மை கொண்டது.
புற்றுநோய் பற்றி தவறான கருத்துகள் மக்களிடையே நிலவி வருகின்றன. உலக புற்றுநோய் தினம், தவறான கருத்துக்களுக்கு மாற்றாக கீழ்வரும் உண்மைகளை முன்வைக்கிறது:
* புற்றுநோய் ஒரு தொற்று நோய் அல்ல.
* 90 சதவீதம் புற்றுநோய் பரம்பரையாக வருவதில்லை.
* புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.
* புற்றுநோயைப் பற்றி வெளிப்படையாக பேசுதல் தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் முன்னேற்றம் தரும்.
* பெரும்பாலான புற்றுநோய்கள் ஆரம்பிக்கும்போதே அறிகுறிகள் தென்படும். அந்நிலையிலேயே கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்தலாம்.
* புற்றுநோய் கட்டி வலி இல்லாமலும் இருக்கும்.
தடுப்பு முறைகள்
புற்று நோய் வராமல் முன்கூட்டியே தடுக்கமுடியும். நம் வாழ்க்கை முறையை
மாற்றி அமைக்கும்போது புற்றுநோய் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். புகை பிடிக்காமல் இருத்தல், மது அருந்தாமல் இருத்தல், புகையிலை பான்பராக் போன்றவைகளை தவிர்த்தல், உடற்பயிற்சி, கொழுப்பு சத்துள்ள உணவை தவிர்த்தல், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுதல், துரித உணவுகளை தவிர்த்தல், தனிமனித ஒழுக்கத்தை பின்பற்றுதல் ஆகியவற்றைப் பின்பற்றுவதால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கல்லீரல், கர்ப்பப்பை வாய் ஆகிய உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களை தடுக்க முடியும்.
புற்றுநோய்க்கான ஏழு முக்கிய அறிகுறிகள்
*ஆறாத புண்
* வழக்கத்துக்கு மாறாக மாதவிடாய் ரத்தப்போக்கு அல்லது ரத்தக்கசிவு
*மார்பகத்தில் அல்லது உடலின் பிற இடங்களில் ஏற்படும் கட்டி
*உணவு செரிக்காமல் இருத்தல் அல்லது உணவை விழுங்கும்போது சிரமப்படுதல்
*மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் மாற்றம்
* மரு அல்லது மச்சத்தில் ஏற்படும் மாற்றம்
*தொடர் இருமல் மற்றும் குரலில் மாற்றம்
இவைகள் புற்றுநோயாகவும் இருக்கலாம். அலட்சியம் கூடாது. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்த முடியும். புற்றுநோய் விழிப்புணர்வு இருந்தால் வாழ்க்கையை சீராகவும் வளமாகவும் அமைத்துக்கொள்ள முடியும்.
கண்டறியும் முறைகள்
புற்றுநோயை ஆரம்ப நிலை யில் கண்டறியும் முறைகளும் தற்போது உள்ளது. மார்பக புற்றுநோய்க்கு ‘மேமோகிராம்’, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு ‘பேப் ஸ்மியர்’, குடல் புற்றுநோய்க்கு உள்நோக்கிகள் (எண்டோஸ்கோபி) ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.
கதிரியக்க சிகிச்சை கருவி
‘ட்ரூ பீம்’ எனப்படும் கருவியைக் கொண்டு நவீன கதிரியக்கச் சிகிச்சை முறைகளாகிய 3ஞிசிஸிஜி, IMRT, IGRT, RAPIDARC மற்றும் SBRT ஆகியவற்றை அளிக்க முடியும். இதனால் புற்றுநோயை மிகவும் குறைந்த பக்க விளைவுகளுடன் குணமடையச் செய்ய முடியும்.
இந்த அதிநவீன ‘ட்ரூ பீம்’ கதிரியக்க சிகிச்சை கருவியைக் கொண்டு பக்கவிளைவுகள் ஏற்படாமல் அல்லது மிகவும் குறைவான விளைவுகளுடன் புற்றுநோயை குணப்படுத்த முடியும். மேலும் அண்மை ஊடுகதிர் சிகிச்சை (Brachytherapy) முறையிலும் எளிதில் குணமடைய முடியும்.