தமிழ்த் தலைவர்களுக்கு சுதந்திரமாக வாழ தற்போது நாட்டில் இடம் இல்லை, அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
மேலும் அங்கு தொடர்ந்த அவர்,
இப்போது நாடு செல்லும் போக்கு முறைகேடானது. ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் காணப்படாத நிலை தற்போது காணப்படுகின்றது.
தமிழ்த் தலைவர்களுக்கு இப்போது பாதுகாப்பற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
என்றாலும் முக்கியமாக அது விடுதலைப் புலிகளால் ஏற்பட்டதா? அல்லது யாரால் ஏற்பட்டது என்பது தொடர்பில் எமக்கு தெரியவில்லை. அது முறையாக விசாரணை செய்யப்பட வேண்டும்.
ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் இப்படியான நிலை இருக்கவில்லை. நாட்டில் சுயாதீனத்தன்மை இருக்க வேண்டும் அதன் மூலமாகவே நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
அதேபோன்று பதவிற்காக பிரதமரின் பின்னால் சென்று கொண்டிருந்தால் எதுவும் நடக்காது. அதனால் அதனை விட்டு விடுங்கள் எனவும் விமல் தெரிவித்தார்.
இதேவேளை சுமந்திரனுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் முன்னாள் விடுதலைப்புலிகள் என்ற வகையிலேயேயும், விடுதலைப்புலிகளே அவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி தரப்பு தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில் விமலின் கருத்து முற்றாக மாறுபட்ட வகையினில் அமைந்திருப்பதும், குறித்த விடயத்தில் அவர் விடுதலைப்புலிகளை இணைக்காமல் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாகன முறைக்கேடு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் நீதிமன்றத்தில் விஷேட அனுமதியினால் பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்திருந்தார்.