முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சி தலைமை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதனால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பின்னர் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்றார். மேலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதன்பின்னர் அ.தி.மு.க. தலைமை கூட்டி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பெருவாரியான எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று சசிகலாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். எனினும், தனக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தந்தி டிவிக்கு பேட்டி அளித்தார். அப்போது, “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ‘நீங்கள் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும்’ என்று அனைவரும் கூறினார்கள்.
யாருடன் தொடர்பில் இருக்க வேண்டும் யாருடன் தொடர்பில் இருக்க கூடாது என ஜெயலலிதா எங்களுக்கு சுட்டி காட்டி உள்ளார்” என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக சசிகலா இருந்தாரா? என்ற கேள்விக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார்.
“2012-க்கு பிறகு ஜெயலலிதா மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கும் வரை நான் சசிகலாவிடம் பேசியது இல்லை. ஜெயலலிதா சொன்ன வேலையை மட்டுமே நான் செய்தேன். மற்றவை குறித்து நான் சிந்தித்தது கூட இல்லை. முதல்-அமைச்சர் பதவிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டார்கள். அவர்கள் என்னை அசிங்கப்படுத்தியதாக நினைக்கவில்லை. நான் வகித்த முதல்வர் பதவிக்கு அவமானம் நேர்ந்ததாக கருதுகிறேன்.
வாக்களித்த மக்களின் எண்ணங்களை கருத்தில் கொண்டு எம்.எல்.ஏக்கள் செயல்பட வேண்டும். என்னுடைய பின்னணியில் தி.மு.க, பா.ஜ.க. என யாரும் யாரும் இல்லை. புதிய கட்சி தொடங்கும் எண்ணமும் இல்லை. கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் எனது சுற்றுப்பயணம் தொடரும்.
அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நான் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்பேன். பின்வாசல் வழியாக பதவியை பிடிக்க வேண்டும் என நினைக்கவில்லை” என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.