ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் இருந்த தொடர்புகள் குறித்து இந்தியா தவறான புரிதலுடன் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கம் சீனாவுடன் முன்னெடுத்து வரும் தொடர்புகள் குறித்து இந்தியா அமைதியாக இருந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் நாமல் இதனை கூறியுள்ளார்.
தமது தந்தையின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு சொந்தமான நிலத்தையும் நீர் நிலைகளையும் வேறு ஒரு நாட்டுக்கு எதிராக பயன்படுத்த இடமளிப்பதில்லை என்ற கடும் நிலைப்பாட்டில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனது தந்தையின் ஆட்சியின் போது இந்தியாவுக்கோ சீனாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.