ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் படுகொலைக்கு நீதி கோரி பெண்கள் அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
ஊர்காவற்துறை பொது சந்தைக்கு முன்பாக காலை 9 மணியளவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஞானசேகரன் ஹம்சியா (வயது – 24) என்ற பெண் கடந்த 24 ஆம் திகதி வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவர் 7 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் பெண்கள் அமைப்பினால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற நீதிமன்ற அமர்வின் போது குறித்த படுகொலை சம்பவத்தின் சாட்சியான வாய்பேச முடியாத சிறுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவனின் பாதுகாப்பு குறித்தும் மீண்டும் கவனத்தில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.