முருகன் தோன்றிய நாள் – வைகாசி விசாகம்
அறுவரும் ஒருவர் ஆன நாள் – கார்த்திகையில் கார்த்திகை
அன்னையிடம் வேல் வாங்கிய நாள் – தைப்பூசம்
அசுரரை அழித்தாட்கொண்ட நாள் – ஐப்பசியில் சஷ்டி
வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் – பங்குனி உத்திரம்
இப்படி… அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே – தைப்பூசம்.
“வேல்” என்றால் என்ன?
வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்.
‘வெல்’ என்ற வினைச்சொல்லே நீண்டு ‘வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகிறது.
ஆகவே, வேல் என்றால் – வெற்றி என்று அர்த்தமாகும்.
ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் – வேல்.
ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் “வேல்” போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப்பாடுறா.
வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு. திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு.
சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது.
பின்னாளில் தான் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் வந்தது. ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன.
சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்.
இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது. வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது: பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்.
பழமுதிர்சோலை, திருச்செங்கோடு,
ஈழத்தில் செல்வர் சந்நிதி,
மலேசியாவில் பத்துமலை, உள்ளிட்ட பல ஊர்களில்
எல்லாம் வேல் வழிபாடு தான் நடைமுறையில் உள்ளது.
வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்.
வேலின் முகம் – அகன்று விரிந்து இருக்கும். ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்.
வேலின் கீழ் நுனி – வட்டமாக முடியும். ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்.
வேல் – பெருமை மிக்கது. மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்.
ஈட்டி – அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு.
வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே. எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை.
ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன.
இப்படி, பண்டைத் தமிழ்ச் சமூகம், “வேலை” முன்னிறுத்தி, எப்படித் தன் மரபுகளை ஒத்து வாழ்ந்தது. இன்றும் கிராமத்தவர்கள், இந்த வேல் வழிபாட்டையே அதிகம் போற்றுகிறார்கள்.
தொலைந்து போன வேல் வழிபாடு, தமிழ் வழி வழிபாட்டை மீண்டும் முன்னிறுத்த, அருணகிரி நாதர் முயற்சிகள் பல செய்தார்.
பின்னால் வந்த பல கவிஞர்களும், வேலைப் போற்றிப் பாடியுள்ளார்கள். பாரதியாரின் வேலன் பாட்டு, அதில் மிகவும் பிரபலம்.
முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்.
அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர். முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்.
முருகன் வேறு, வேல் வேறு அல்ல.
முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு. ஆறு படைகள் உண்டு.