வீடு, அலுவலகம், சமூகவெளி என்று எங்கெங்கே நாம் எப்படி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு பாடத்தை, ஒரே நாளில் கற்றுக் கொடுத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
எதையும் 5 நிமிடம் தள்ளிப்போடுங்கள்:-
‘எந்த ஒரு பெரிய முடிவெடுக்கறதுக்கு முன்னாலயும், அஞ்சு நிமிஷம் யோசி’ என்பார்கள். இவர் அதை 8 மடங்கு பின்பற்றியிருக்கிறார். நேற்று 40 நிமிடம் இவர் மெரினாவில் அமைதியாக அமர்ந்திருந்தது, எல்லாரும் பின்பற்ற வேண்டிய விஷயம்.
மீடியா வரக் காத்திருந்ததாக இருக்கலாம். ஆனால், அதை அவர் வீட்டில் செய்யாமல், அலுவலகத்தில் செய்யாமல் அமைதியான ஓர் இடம் தேடி வந்து அமர்ந்தது… To be noted. எதைப் பேசவேண்டும், எப்படிப் பேசவேண்டும் என்று அவர் மனதில் எல்லா கேள்விகளையும், எல்லா கோணங்களிலும் சிந்தித்து அந்தப் பேட்டியைக் கொடுக்க அவருக்கு அந்த 40 நிமிடங்கள் பெரும் உதவி புரிந்திருக்கும்.
புன்னகையில் குழப்புங்கள்
‘எதிரியாக இருந்தாலும் புன்னகையுங்கள்’ என்று தன்னம்பிக்கை வகுப்புகளில் சொல்வார்கள். அது எதிரியைக் குழப்பும். அல்லது நெருக்கமாக்கும். இவர் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து புன்னகைத்தது, உடன் இருந்தவர்களையே கலங்கடித்திருக்கிறது.
மன இறுக்கத்தை முகத்தில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை
இந்த வரிகள் இவரே சொன்னதுதான். எந்த நிலையிலும் இவர் தனது மன இறுக்கத்தை, முகத்தில் காட்டியதில்லை. ஒரு முதலமைச்சராக இருந்து, அலங்காநல்லூர் சென்றார். ஊருக்குள் செல்ல அனுமதி இல்லை. புன்னகை மாறாமல் பேட்டி கொடுத்துவிட்டு திரும்பி வந்துவிட்டார்.
இவரைப் பற்றிய விமர்சனங்கள் பற்றிக் கேட்டபோது, “பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும்” என்றார். இத்தனை நாட்களும், தான் மன அழுத்தத்தோடு இருந்ததாகச் சொன்னார். ஆனால் அதை வெளிக்காட்டாமல் பூட்டி வைத்துக் கொண்டிருந்தார். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்து!
எதிரிகளையும் மதியுங்கள்பேட்டிகளில், ‘சின்னம்மா’ என்றுதான் சொல்கிறார். ஆனால் அவர் மூலம் பாதிக்கப்பட்டதை அழுத்தமாகவே பதிவு செய்கிறார். ‘காலம் கனியும் போது அவர் முதல்வராகட்டும்’ என்கிறார். எந்த இடத்திலும் எதிராளியைக் காயப்படுத்தவோ, தரம் தாழ்ந்து பேசவோ இல்லை.
உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்“ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகுவதாய் அறிவித்தது குறித்து அவரிடம் பேசினீர்களா?” என்று கேட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் சொன்ன பதில்: “இல்லை. அது அவரது பெர்சனல் காரணமாகக் கூட இருக்கலாம். அவர் உணர்வை மதித்து, உடனே கேட்டு அவரை சங்கடத்திற்கு ஆளாக்க வேண்டாம். 15-20 நாட்கள் கழித்துப் பேசலாம் என்று இருந்தேன்” என்றிருக்கிறார்.
நெருக்கமாக இருங்கள்
‘வணக்கம் திரு பன்னீர்செல்வம்’ என்று பெயர் சொல்லித்தான் பேசுகிறார்கள் மீடியாவில். பெயர் சொல்லி அழைக்கிற முதல்வரை தமிழ்நாடு பார்த்து வருடங்கள் ஆகிறது. இந்த நெருக்கம் பேணுதல், ஒரு லீடருக்குரிய முக்கிய க்வாலிட்டி.
குதிரையை விடுங்கள். லகான் கையில் இருக்கட்டும்.
உங்கள் குதிரை சாலையில் பறக்கட்டும். ஆனால் அதன் லகான் உங்கள் கையில் இருக்கட்டும் என்பதாக பரபரப்பான ஒரு விஷயத்தைப் பகிர்ந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார்; ‘100%-ல் 10% மட்டும்தான் பேசியிருக்கிறேன்’. ஆக, இன்னும் ஏதேதோ இருக்கிறது என்று எதிரிகளை கிலியிலேயே வைத்திருக்கிறார்.
பணிவாக இரு
இதுவரை இவருக்கு ஒரு அடைமொழி இல்லை. முதலமைச்சராக இருந்தும், அதைக்கூட சொல்லாமல் ‘ஓ.பன்னீர்செல்வம்’ என்றோ, ‘ஓபிஎஸ்’ என்றோதான் அழைக்கப்படுகிறார். ‘ஓபிஎஸ்தான் வரணும்’ என்று எவரோ கத்த, திரும்பி ‘ஓபிஎஸ் என்றில்லை. மக்கள் விரும்புகிற யார் வேண்டுமானாலும் ஆளலாம்’ என்கிறார். பிறரெல்லாம் இரட்டை இலை என்று சின்னமான வெற்றி முத்திரையைக் காட்ட, இவர் கையைக் கும்பிட்டுக்கொண்டேதான் நகர்கிறார்.
எல்லாவற்றையும்விட, இவர் சொல்லியிருக்கிற இன்னொரு பாடம்: ‘நிறைவாகும் வரை, மறைவாக இரு!’ . இத்தனை நாள் கற்றுக் கொண்டு, தன்னை முன்னிறுத்தாமல் இருந்து, இப்போது தக்க சமயத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.
அரசியலில் எதுவும் எப்போது வேண்டுமானாலும் மாறும். இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஓ. பன்னீர்செல்வம், நாளைக்கு என்ன செய்வார் என்பது யாருக்கும் தெரியாது. இருந்தாலும் இன்னைக்குக் கத்துக்கலாம் மக்களே.. கற்றுக் கொண்டால் குற்றமில்லை!