ரஞ்சன் ராமநாயக்கவின் கற்றல் நடவடிக்கைகளுக்கு சிறைச்சாலை நிர்வாகம் முட்டுக்கட்டை போடுவதாக தெரியவந்துள்ளது.
பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் பிரதமர் அலுவலக பிரதான அதிகாரி சாகல ரத்நாயக்க ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.
எதிர்வரும் நான்காம் திகதி பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றவுள்ள நிலையில் ரஞ்சன் ராமநாயக்க கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.
ரஞ்சன் முறைப்பாடு
எனினும் தனது கற்றல் நடவடிக்கைகளுக்காக சிறைச்சாலை திணைக்களத்தின் உரிய அனுமதியுடன் வழங்கப்பட்ட லேப்டாப் கருவியை வெலிக்கடை சிறை அதிகாரிகள் பறித்தெடுத்துச் சென்றுள்ளதாக இதன்போது ரஞ்சன் பிரதமரின் செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
ரஞ்சனுக்கு சிறையில் இருந்தபடியே கற்பதற்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று வாக்களித்துள்ள சிறைச்சாலை அதிகாரிகள் லேப்டாப்பை திருப்பிக் கொடுப்பதில் அசிரத்தை காட்டியுள்ளனர்.
இந்த விடயங்களை கேள்விப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரஞ்சன் ராமநாயக்கவை சட்டரீதியான வழியில் விடுதலை செய்யக்கூடிய சாத்தியங்கள் தொடர்பில் ஆராயுமாறு தனது செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.