Loading...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (08-02-2017) கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
கேள்வி: தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண நிலை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் நேற்று இரவே எனது கருத்தை தெளிவாக தெரிவித்து இருக்கிறேன். இன்று காலை அதை வலியுறுத்தி மீண்டும் ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறேன். புதிதாக எதுவும் சொல்வதற்கு இல்லை.
கேள்வி: பன்னீர்செல்வத்தை பின்னால் இருந்து இயக்குவது நீங்கள் தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்களே?
இதற்கு மீண்டும் பதில் சொல்லி, என்னுடைய நேரத்தையும், தரத்தையும் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.
கேள்வி: பன்னீர்செல்வத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்து இருக்கிறதா?
முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு தெரிவித்ததில்லை. பன்னீர்செல்வம் தலைமையில் இருக்கும் அரசுக்கு நாட்டு மக்களின் பிரச்சினைகளின் அடிப்படையில், சில கொள்கைகளின் அடிப்படையில், சில சட்ட முன் வடிவுகள் கொண்டு வந்தபோது ஆதரவு தெரிவித்தோம் என்பது மட்டும் தான் உண்மை.
கேள்வி: ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்து இருக்கிறாரே?
அம்மையார் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோதே நாங்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினோம். அவர் மரணமடைந்த பிறகு மக்களிடத்தில் பலவித சந்தேகங்கள் நிலவி வருகின்றன, எனவே இதுகுறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஆனால், அப்போதெல்லாம் விசாரணை நடத்தப்படவில்லை. சட்டமன்றத்தில் இதுபற்றி எங்களுடைய உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, அது அவைக்குறிப்பிலேயே இருக்கக்கூடாது என நீக்கினார்கள். ஆனால், இப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அதையே காலம் கடந்து சொல்லி இருந்தாலும், உள்ளபடியே வரவேற்கத்தக்கது. இப்போதாவது விசாரணையை முறையாக நடத்திட வேண்டும்.
Loading...